அடுத்தாண்டு முதல் 10 சதவிகித இட ஒதுக்கீடு விதிகிளில் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு. - kalviseithi

Jan 2, 2022

அடுத்தாண்டு முதல் 10 சதவிகித இட ஒதுக்கீடு விதிகிளில் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு.

 

இந்த கல்வியாண்டில், மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தற்போது அமலில் உள்ள அளவுகோல்களே பின்பற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று இதுகுறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.


நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றுவரும் சமயத்தில், விதிகள் மாற்றப்பட்டால் குழப்பம் உண்டாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம் அடுத்தாண்டு முதல் அமல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.


8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமான அளவுகோல் புதிய விதிகளில் தக்கவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்கள், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், அவர்கள் இந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற முடியாது என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது, அமலில் உள்ள 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான வருமான அளவுகோல்கள் மறு சீராய்வு செய்யப்படும் என அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நவம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.


அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14, 15 மற்றும் 16 ஆகியவற்றுக்கு ஏற்ப 8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமானம் அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது என அரசு நீதிமன்றத்தில் வாதம் மேற்கொண்டது. அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், "உங்களிடம் மக்கள்தொகை அல்லது சமூக அல்லது சமூக - பொருளாதார தரவு இருக்க வேண்டும். எட்டு லட்சம் என்ற அளவுகோலை மெல்லிய காற்றிலிருந்து பறித்து நிர்ணயிக்க முடியாது.


நீங்கள் 8 லட்சம் வரம்பை விதித்து சமமற்றவர்களை சமமாக்குகிறீர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில், 8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.


அரசியலமைப்பின் கீழ், பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு பெறுபவர்கள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் அல்ல. இது ஒரு கொள்கை விவகாரம். ஆனால். அதன் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிப்பதற்காக கொள்கை முடிவிற்கு வருவதற்கான காரணங்களை அறிய நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு" என தெரிவித்தார்.


இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், நீட் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தால், தில்லியில் உள்ள மருத்துவர்கள் கடந்த வாரம் போராட்டத்தை தொடங்கினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி