தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2022

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழிகாட்டுதலுக்கு எதிரான வழக்கில், 'அரசுக்கு நிதி நிலை தான் பிரச்னை எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம்.'நிதிநிலை சரியான பின் காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே' என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.


கரூர் சின்னமநாயக்கன்பட்டி பர்வதம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பி.எஸ்சி.,- பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஜூன் 23ல் உத்தரவிட்டது.இதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கவில்லை. 


  இதற்கு எதிராக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியடைந்தோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.ஜூலை 1ல் தனி நீதிபதி தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் வெளியிட்டார். 


அதில் கல்வித் தகுதி, முன்னுரிமை விபரங்கள் இடம் பெற்றுள்ளன; இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. விண்ணப்பிப்போர் பள்ளி அமைந்துள்ள ஊராட்சி அல்லது ஒன்றியம் அல்லது மாவட்டத்திற்குள் அல்லது அருகிலுள்ள மாவட்டத்தில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்புடையதல்ல. எனவே, வழிகாட்டுதல்களுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு பர்வதம் கோரியிருந்தார்.


அவரின் வழக்கை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.தமிழக அரசுத் தரப்பில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''அரசுக்கு நிதி நிலை பிரச்னை உள்ளது எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாம். நிதிநிலை சரியான பின், காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே,'' என கருத்து தெரிவித்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடக்கிறது.

2 comments:

  1. மதுரை கிளை நீதிபதி ஐயா அவர்களின் சில காலம் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்கலாமே என்ற சிந்தனை கல்வி அமைச்சர் அவர்களுக்கும் இல்லை. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இல்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் மட்டுமே உறுதியாக உள்ளனர். கடந்த ஆட்சியில் நிதி இல்லை என்று சொன்னானுங்க. ஆனால் வட்டம் மாவட்டம் எல்லோரும் கோடிகளில் புரளும் ஆடியோ ரிலீஸ் கேட்டோம். கடந்த 10 ஆண்டு காலம் வீணடித்து விட்டார்கள் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரையும். அதே நிலை கலைஞர் ஐயா அவர்களின் பொற்கால ஆட்சியில் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் கடந்த ஆட்சி போன்றே நடந்து கொள்கிறார்கள் என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து மாற்றம் கொண்டு வாருங்கள்.

    ReplyDelete
  2. ஆட்சிகள் மாறினாலும் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் சொல்லக்கூடிய I. A. S அதிகாரிகள் மாறுவதில்லை, அதனால் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அவ்வாரே நடந்துகொள்கிறார்கள். ஐஏஎஸ் கள் புத்தி அப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி