பொன்னியின் செல்வன் - 60 ஆண்டுகளுக்கும் மேலான கனவு - திரையிலும் நிகழ்கிறதா அந்த மேஜிக்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2022

பொன்னியின் செல்வன் - 60 ஆண்டுகளுக்கும் மேலான கனவு - திரையிலும் நிகழ்கிறதா அந்த மேஜிக்?

பொன்னியின் செல்வன் விமர்சனம்: 60 ஆண்டுகளுக்கும் மேலான கனவு - திரையிலும் நிகழ்கிறதா அந்த மேஜிக்?

முதலில் படத்தில் வரும் கதா பாத்திரங்களை பற்றி தெரிந்து கொண்டு பின் கீழ் உள்ளவற்றை படிக்கவும். 


வானில் தோன்றும் தூமகேது சோழ குல வேந்தர்களில் யாருக்குப் பாதகமாய் இருக்கப்போகிறது என்பதைச் சொல்கிறது பொன்னியின் செல்வனின் முதல் பாகம்.


கடம்பூர் மாளிகையில் ஏதோ சதித் திட்டம் நடக்கவிருக்கிறது என்பதனை அறிந்துகொள்ளும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், தன் உற்ற தோழனான வந்தியத்தேவனை அங்கு அனுப்பி, அங்கு நடக்கும் விஷயங்களை தன் தந்தையிடமும், தமக்கையிடமும் சொல்லப் பணிக்கிறான். சோழ தேசத்தின் சதிகாரர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்கிறான் வந்தியத்தேவன். அவனுக்குப் பல ரூபங்களில் உதவிகள் ஒரு பக்கம் வந்தாலும், அபாயங்களும் கூடவே வருகின்றன. சுந்தர சோழரையும், குந்தவையையும் சந்திப்பதற்குள்ளாக யார் கண்களில் எல்லாம் சிக்கக்கூடாதோ அவர்கள் கண்களில் எல்லாம் சிக்கிக்கொள்கிறான் வந்தியத்தேவன். பொன்னியின் செல்வனான அருண்மொழி வர்மனையும் சந்திக்கும் வாய்ப்பு வந்தியத்தேவனுக்குக் கிட்டுகிறது. இதற்கிடையே பாண்டியனின் ஆபத்துதவிகள் சதித் திட்டங்களை கூர்மைப்படுத்துகிறார்கள். இறுதியில் சோழ வேந்தர்களில் யாருக்கு அபாயம் நிகழ்ந்தேறியது என்பதாக முதல் பாகம் முடிகிறது.


ஆதித்த கரிகாலனாக, காதலின் பிரிவில் செய்த தவற்றினால் என்ன செய்வதென்றே தெரியாமல் போர் மற்றும் வெற்றி வெறிப் பீடித்து அலையும் நபராக விக்ரம். தனக்கு ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என பார்த்திபேந்திரனிடம் ஆதித்த கரிகாலன் சொல்லும் காட்சி விக்ரமின் நடிப்புக்கு ஒரு சோறு பதம்.


கிட்டத்தட்ட வந்தியத்தேவனின் பார்வையில்தான் கதையே நடக்கிறது. அப்படிப்பட்ட வந்தியத்தேவனாகக் குறும்பும் குத்தாட்டமுமாக கார்த்தி. பெண்களிடம் வலிய வலியச் சிரித்துக்கொண்டே அதே சமயம் சாதுர்யமாகப் பேசித் தப்பிப்பது அவருக்கான அன்றாட வேலையாகிப் போகிறது. தலைப்பின் நாயகனான ஜெயம் ரவி கதாபாத்திரம் பெரிய அளவில் அடுத்த பாகத்தில்தான் இருக்கும் போல! பழி தீர்க்க குரோதத்துடன் காய்களை நகர்த்தும் நந்தினியாக ஐஸ்வர்யா ராய். அந்த அழகுப் பதுமையின் கண்களில் காதலுடன் தோய்ந்த விஷத்தில் சிக்கித் தவிக்கும் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார். நந்தினியைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், அவளைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஒரே ஆணாகச் சிறிய பழுவேட்டரையர் பார்த்திபன்.


சோழ சாம்ராஜ்யத்திலேயே அதிபுத்திசாலியான குந்தவையாக த்ரிஷா. நாவலில்கூட இல்லாத ஒரு காட்சியை குந்தவைக்குப் படத்தில் வைத்து, டக்கென அவரின் சாமர்த்தியத்தைப் பறை சாற்றும் அந்த நிகழ்வு நச்!


ஆபத்துதவி ரவிதாசனாக கிஷோர். நந்தினி ரவிதாசனை இயக்குகிறாளா அல்லது ரவிதாசன் நந்தினியை இயக்குகிறானா என்னும் குழப்பும் கதை நெடுகவே இருக்கத்தான் செய்கிறது. மின்னல் வேகத்தில் மின்னி மறையும் காட்சிகளுக்கு இடையே நகைச்சுவைக்கான வெளியை நமக்கு ஆழ்வார்க்கடியானாகத் தருகிறார் ஜெயராம். அவரும் கார்த்தியும் இணையும் காட்சிகளில் புதிதாக எழுதப்பட்ட நகைச்சுவை வசனங்கள் கூடுதலாக அவரின் கதாபாத்திரத்தினை ரசிக்க வைக்கிறது. இவர்களைக் கடந்து படத்தில் இருக்கும் சிறிய இடத்தை காற்றே நிரப்பமுடியாத சூழலில், அதனுள் பிரபு, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சோபியா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, லால், மோகன் ராம், வினோதினி, நிழல்கள் ரவி, அஸ்வின், ரகுமான் எனப் பலர் அவ்வப்போது தலை காட்டுகிறார்கள்.


தான் ஆசை ஆசையாய் நடிக்கக் காத்திருந்து, பின்னர் அந்தக் காலம் கனியாததால் பொன்னியின் செல்வனில் எப்படியும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில், படத்தின் முகப்புக் குரலாக ஒலிக்கிறார் கமல்ஹாசன்.


நாவல்களை, புதினங்களைத் திரைப்படமாக உருமாற்றுவது என்பது ஒரு பெரும் கலை. அத்தியாயம் அத்தியாயமாக லயித்து லயித்துப் படித்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கற்பனை உருவம் நிச்சயம் இருந்திருக்கும். வந்தியத்தேவன் இப்படி இருப்பான்; நந்தினி இப்படி இருப்பாள்; அருண்மொழி வர்மனின் சாகசங்கள் இப்படியிருக்கும் எனப் பல கற்பனைகளைச் சுமந்து கொண்டிருந்திருப்பார்கள். அந்தக் கற்பனைகள் திரையின் முன் வாசகனின் மனம் கோணாமல் விரிப்பது என்பது பெரும் சவால். அந்தச் சவாலைப் பொன்னியின் செல்வனின் மூலம் ஏற்கப் பலர் முயன்று இறுதியில் அதில் வென்றிருக்கிறார் மணிரத்னம்.


இரண்டு பாகங்களில் ஐந்து பாக புத்தகத்தின் கதையைச் சொல்ல வேண்டும், எதை விடுப்பது எதை எடுப்பது என ஏகப்பட்ட குழப்பங்களில் இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் எனப் பார்த்துப் பார்த்து திரைக்கதையாக்கி இருக்கிறார்கள் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமாரவேல். சில கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் புதிதாக எழுதப்பட்டிருக்கின்றன. அந்தந்த கதாபாத்திரங்களைப் புத்தகம் படித்திராத பார்வையாளர்களிடமும் பதிய வைக்க இன்னும் அழுத்தமான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அமரர் கல்கி பயன்படுத்திய வரிகளை மூலதனமாக வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான வசனங்களை எழுதி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன்.


ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், அவர்களுக்கான போதிய வெளி கிடைக்காமல் வந்து வந்து போவதால், படமே ஏதோவொரு படத்தின் முக்கியக் காட்சிகளை மட்டும் பார்ப்பது போல இருக்கிறது. ஆனால், தேவையான எதையும் தவிர்த்துவிடாமல் அட்டகாசமாக கட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்.


பாடல்களைக் கடந்து பின்னணி இசையில் தொடர்ச்சியாக ஆச்சர்யப்பட வைக்கிறார் ரஹ்மான். ஏற்கெனவே வெளியான பாடல்களோடு இன்னும் சில சின்ன சின்ன பாடல்களையும் படத்தில் இணைத்திருக்கிறார்கள். 'தேவராளன் ஆட்டம்' ரஹ்மானின் ராஜாங்கம். குந்தவையும், நந்தினியும் முதன்முதலாகச் சந்தித்துக்கொள்ளும் காட்சியில் இசைக்கப்பட்ட அந்தப் பாடலும் அதன் வரிகளும் அட்டகாசம்.


வரலாற்றுப் புனைவு படங்கள் என்றாலே பிரமாண்டமான மாளிகைகள், வானுயர கட்டடங்கள், முகப்பு கோபுரங்கள் என்றெல்லாம் நம் கண் முன்னர் அணிவகுத்துக் காத்திருக்கும். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் மிக இயல்பாக யதார்த்தமாக இருக்கிறது மணிரத்னம் உருவாக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்'. பிரமாண்டம் எதிர்பார்க்கும் ரசிகனையும் திருப்திப்படுத்த வேண்டும், அதீத கற்பனையாகவும் மாறிவிடக்கூடாது என்ற சிக்கலான பணி கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு. குறிப்பிடத்தகுந்த வகையில் அதை நிறைவேற்றியும் இருக்கிறார்.


குறிப்பாகப் பெரிய அளவில் கிராஃபிக்ஸ், விசுவல் எஃபெக்ட்ஸ் என்றெல்லாம் இல்லாமல் பல நிஜமான இடங்களுக்குச் சென்று படம்பிடித்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் கூட பெரிய அளவிலான சாகசங்களோ மாயாஜால பறக்கும் வித்தைகளோ இல்லை. செட்கள் மற்றும் நிஜமான விஷயங்களே அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன. படத்தின் பெரும்பலமும் சிறு பலவீனமும் அதுதான். சாதாரண ரசிகன் பெரிய திரையில் பார்த்த வரலாற்றுப் புனைவு, ஃபேன்டஸி படங்களில் வரும் சாகசங்களை இதிலும் எதிர்பார்த்தால் கொஞ்சம் ஏமாந்து போக நேரலாம்.


மூன்று முக்கிய நடிகர்களுக்கான ஆரம்ப காட்சியையும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான விளக்கக் காட்சிகளையும் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் வடிவமைத்திருக்கலாம். ஜெயம் ரவிக்கான பின் கதை அடுத்த பாகத்தில் ஒருவேளை விரியலாம். ஆனால் இந்த முதல் பாகத்தின் ஒரு காட்சியில் சோழ தேசத்து குடிமக்களின் ஏகோபித்த அபிமானம் பெற்றவராய் பொன்னியின் செல்வனான ஜெயம் ரவி காட்டப்படுகிறார். ஆனால் அவருக்கு ஏன் இவ்வளவு மக்கள் செல்வாக்கு என்பது எங்கும் சொல்லப்படாததால் நம்மால் அவரின் கதாபாத்திரத்தோடு ஓரளவிற்கு மேல் ஒன்றமுடியவில்லை. அதனாலேயே படத்தின் இறுதிக் காட்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கிறது.


பொன்னியின் செல்வன்


அதேபோல், தொடக்கப் போர்க் காட்சிகளில் வரும் விசுவல் எஃபெக்ட்ஸில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இதுநாள் வரையிலும் நாம் பார்த்துப் பழகிய அரசர்கள் குறித்த மாயப்புனைவுக் கதைகளில் வருவது போன்ற நம்பமுடியாத சாகசங்கள் படத்தில் எங்குமே இல்லை. யதார்த்தமான, நிஜம் தெறிக்கிற சவால்கள் மட்டுமே படம் நெடுக விரவியிருப்பது நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. சிலருக்கு இதில் ஏமாற்றம் இருந்தாலும் இதுவொரு வரவேற்கத்தக்க மாற்றம். அதேசமயம், வீரமும் போர்க்குணமும் செறிந்த சோழர்களின் போர்க்காட்சிகளை இன்னும் எத்தனிப்போடு வடிவமைத்திருக்கலாம். இரண்டு பெரிய போர்க்களக் காட்சிகள். ஆனால் இரண்டிலுமே, சோழர்களின் பராக்கிரமத்தை பறைசாற்றும் வியூகங்களோ போர்த்தந்திரங்களோ இல்லாமல் வெறுமனே வாள்வீச்சாகவும் க்ளோசப் காட்சிகளாகவும் நின்றுபோவது எல்லாருக்குமான ஏமாற்றம்.


அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் புதினம் எப்போது திரைக்கு வரும் எனக் காத்திருந்த நபர்கள் அநேகம். அதைச் சிறப்பாக, பெரிய குறைகள் ஏதுமின்றி பூர்த்தி செய்திருக்கிறது இந்த `பொன்னியின் செல்வன் பாகம் 1'. அதற்காகவே படக்குழுவையும், இந்தப் படைப்பையும் நிச்சயம் வரவேற்கலாம்.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி