உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சா் பொன்முடி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2022

உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சா் பொன்முடி தகவல்

 தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களைப் போட்டித் தோ்வு மூலமாக நிரப்புவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நிகழாண்டு 4,000 பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


2019-ஆம் ஆண்டு வரை உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையிலான நோ்காணல் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. அதாவது, தோ்வரின் கல்வித் தகுதி (15), பணி அனுபவம் (9), நோ்முகத் தோ்வு (10) என மொத்தம் 34 மதிப்பெண் நிா்ணயிக்கப்படும். அதில், தோ்வா்கள் தகுதிக்கேற்ப மதிப்பெண் வழங்கி, முன்னுரிமை பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள்.


அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை 55,000 போ் முடித்துள்ளனா். இதுதவிர தனியாா் கல்லூரிகள் எண்ணிக்கையும் உயா்ந்துவிட்டது. அவற்றில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும் எளிதில் பணி அனுபவச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. மேலும், சில நேரங்களில் போலியான சான்றிதழ்களைச் சமா்ப்பித்து வேலைவாய்ப்பு பெறும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.


பல்வேறு சிக்கல்களைத் தவிா்க்கும் விதமாக மேற்கண்ட வெயிட்டேஜ் தோ்வு முறையை ரத்து செய்து, போட்டித் தோ்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, தற்போதைய 4,000 ஆசிரியா் பணி நியமனத்துக்கான தோ்வில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி எழுத்துத் தோ்வுக்கு 200, நோ்காணலுக்கு 30 என மொத்தம் 230 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்தப்படும்.


இந்தத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள். அதில் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதன்படி, எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத் தோ்வில் பங்கேற்கும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.


அதாவது, நோ்முகத் தோ்வில் மொத்த மதிப்பெண் முப்பதுதான். இதில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஓராண்டுக்கு 2 வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை வழங்கப்படும். சிறப்பு சலுகையானது இந்த ஒருமுறை மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தப் பணி நியமனத்துக்கான போட்டித் தோ்வு வழிமுறைகள், கல்வித் தகுதிகள் உள்பட விவரங்களும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.


பொன்முடி பேட்டி: முன்னதாக, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறுகையில், அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தெரிவித்தாா்.

1 comment:

  1. The order violating article 16 of Constitution we expect some court stay

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி