தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2022

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும்

 தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டது. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.


இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது. ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு செய்தி வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இணைக்கும் பணி எளிதாக இருந்த போதிலும் மக்கள் அதனை சிரமமாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி