மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 10ம் வகுப்பு ரிசல்ட் 17ல் வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2023

மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 10ம் வகுப்பு ரிசல்ட் 17ல் வெளியாகிறது

 ''பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 5ல் வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். செய்முறை தேர்வுக்கான தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச்சில் நடக்க உள்ளது.


பத்தாம் வகுப்புக்கு, ஏப்ரல், 6 முதல், 20 வரையிலும்; பிளஸ் 1க்கு, மார்ச், 14 முதல், ஏப்ரல், 5 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, மார்ச், 13 முதல், ஏப்ரல், 3 வரையிலும், பொதுத் தேர்வுகள் நடக்கின்றன.


மார்ச், 13ல் துவங்கி, ஏப்ரல், 20ல் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைகின்றன.


இந்நிலையில், பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார்.


பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆகியோர் பங்கேற்று, பொதுத் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, வழிகாட்டுதல் வழங்கினர்.


இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: பொதுத் தேர்வை எந்த பிரச்னையுமின்றி சுமூகமாக நடத்தும் வகையில், முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியும் இறுதி செய்யப்பட்டு உள்ளது.


பிளஸ் 2வுக்கு, மே, 5ல் முடிவுகள் வெளியிடப்படும். பத்தாம் வகுப்புக்கு மே, 17; பிளஸ் 1க்கு, மே, 19ம் தேதி தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.


பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, வினாத்தாளின் தன்மையை புரிய வைக்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தயாரிக்கப்படும் புத்தகங்களையும், பழைய வினாத் தாள்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


செய்முறை தேர்வு தேதியில் மாற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை பொறுத்தவரை, மார்ச், 7 முதல், 10 வரை நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், செய்முறை தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வசதியாக, மார்ச், 1 முதல், 9க்குள், செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி