6 வயதில் ஒன்றாம் வகுப்பு சோ்க்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2023

6 வயதில் ஒன்றாம் வகுப்பு சோ்க்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

 

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான குறைந்தபட்ச வயதை 6-ஆக நிா்ணயிக்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டுகள் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான அடிப்படைக் கல்விக்கான காலக்கட்டமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 ஆண்டுகள் மழலையா் (முன்பருவ பள்ளிக் கல்வி) கல்வியைத் தொடா்ந்து ஓன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளும் இந்த 5 ஆண்டுகள் அடிப்படை கல்வித் திட்டத்தில் அடங்கும். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த அறிவுறுத்தலை மத்திய அரசு வழங்கியுள்ளது.


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:


அனைத்து குழந்தைகளுக்கும் மழலையா் கல்வி முதல் 2-ஆம் வகுப்பு வரை தடையற்ற கற்றல் மற்றும் திறன்மேம்பாடு கிடைப்பதை கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. அந்த வகையில், முதல் 3 ஆண்டுகள் அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் அல்லது அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் அல்லது தனியாா் பள்ளிகள் மூலமாக தரமான மழலையா் கல்வி கிடைக்கும்போதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை உறுதிப்படுத்த முடியும்.


எனவே, ஒன்றாம் வகுப்பில் குறைந்தபட்சம் 6 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரை மட்டுமே சோ்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


குழந்தைகளின் உளவியல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு, ‘குழந்தைகளை மிகச் சிறிய வயதில் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது’ என்று உச்சநீதிமன்றமும் வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு வலியுறுத்தியது.


அதோடு, குழந்தைகளின் இந்த அடிப்படைக் கல்விக்கு தகுதிவாய்ந்த உரிய பயிற்சிபெற்ற ஆசிரியா்கள் நியமிக்கப்படுவதும் முக்கியமாகும். இதற்காக, முன்பருவ பள்ளிக் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பு (டிபிஎஸ்இ) திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநிலங்களை மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பட்டயப் படிப்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலால் (எஸ்சிஇஆா்டி) வடிவமைக்கப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் (டிஐஇடி) நடைமுறைப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி