திரிபுராவில் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரகாஷ் காரத் வாக்குறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2023

திரிபுராவில் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரகாஷ் காரத் வாக்குறுதி

 

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.


ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி இதே வாக்குறுதியை பல மாநிலங்களில் அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசத்தில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று துறை சாா்ந்த வல்லுநா்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த வாக்குறுதி தொடா்ந்து வருகிறது.


பாஜக ஆட்சியில் உள்ள திரிபுராவில், மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.


60 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் வரும் 16-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜகவுக்கும் இடதுசாரி -காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. இதுதவிர, திரிணமூல் காங்கிரஸ், மாநிலக் கட்சியான திப்ரா மோதா ஆகியவையும் களத்தில் உள்ளன.


இந்நிலையில், மேற்கு திரிபுரா மாவட்டத்தின் காயா்பூரில் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ் காரத் பேசியதாவது:


திரிபுராவில் இடதுசாரி கட்சிகள் ஆட்சியில் இருந்த காலகட்டம் வரை பழைய ஓய்வூதியத் திட்டம்தான் நடைமுறையில் இருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்கள்.


இந்தத் தோ்தலில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்படும். இதன்மூலம் 1.88 லட்சம் மாநில அரசு ஊழியா்கள் பயனடைவாா்கள்.


திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் எதிா்க்கட்சிக் கூட்டணி பெறும் வெற்றி தேசிய அளவிலும் நிச்சயமாக பேசுபொருளாகி தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும், மச்சாா்பின்மையையும் மீட்கும் போராட்டம் உத்வேகம் பெறும் என்றாா்.

2 comments:

  1. தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள்....
    இப்படிக்கு
    TNTET Passed Candidates.    ReplyDelete
  2. கம்யூனிஸ்ட் ஆட்சி உள்ள மாநிலங்களில் சொன்னதைச்செய்வார்கள்.நம்பிக்கையுடன்ஓட்டளிக்கலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி