கட்டிய கோவணமும் பறிபோச்சு!: உண்ணாவிரதத்தில் ஆசிரியர்கள் குமுறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2023

கட்டிய கோவணமும் பறிபோச்சு!: உண்ணாவிரதத்தில் ஆசிரியர்கள் குமுறல்

 

பட்டு வேட்டி கனவில் இருந்தவருக்கு, கட்டிய கோவணமும் பறிபோனது போன்ற நிலைமை தான், தி.மு.க., ஆட்சியில் எங்களுக்கு ஏற்பட்டு விட்டது' என, 'ஜாக்டோ - ஜியோ' உண்ணாவிரத போராட்டத்தில், ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.


பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வாழ்வாதார மீட்பு என்ற பெயரில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

வாக்குறுதி


சென்னையில் பள்ளிக்கல்வி துறையின் டி.பி.ஐ., வளாகத்தில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


போராட்டம் குறித்து, ஒருங்கிணைப்பாளர் மயில் கூறியதாவது:


கடந்த, ௨௦௨௧ல் சட்டசபை தேர்தலின் போது, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.


ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், வாக்குறுதிகளில் ஒரு சதவீதத்தை கூட, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.


அதேநேரத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 85 சதவீத வாக்குறுதி களை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தேர்தலின் போது, 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம்; ஊதிய முரண்பாடுகளை தீர்ப்போம்; பல்வேறு பிரிவினருக்கும் தொகுப்பூதியத்தை ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்குவோம்' என்றார். அது, எதையும் செய்யவில்லை.


ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக பெற்று வந்த, ஈட்டிய விடுப்பு தொகை; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆட்சியில் இருந்து அமல்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்தி விட்டனர்.


போராட்டம்


தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பட்டு வேட்டி கிடைக்கும் என்ற கனவில் இருந்தவர்களுக்கு, கட்டிய கோவணமும் பறிபோன கதையாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நிலை மோசமாக உள்ளது. அதனால் தான், இந்த போராட்டம்.


எனவே, தமிழக முதல்வர் இனியும் காலதாமதம் செய்யாமல், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.


அரசு மாதிரி மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக, நுழைவுத் தேர்வு நடத்துவது சரியல்லை; தேர்வை ரத்து செய்ய வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி