ஆசிரிய சம்பள முரண்பாட்டை விசாரிக்கும் மூன்று நபர் குழு பட்ஜெட்டுக்கு முன் அறிக்கை கிடைக்குமா ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2023

ஆசிரிய சம்பள முரண்பாட்டை விசாரிக்கும் மூன்று நபர் குழு பட்ஜெட்டுக்கு முன் அறிக்கை கிடைக்குமா ?

 

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 13 ஆண்டுகளாக நீடிக்கும் சம்பள முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு, விரைவில் அறிக்கை தாக்கல் செய்து, வரும் பட்ஜெட்டில் பலன் கிடைக்க வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தமிழக அரசு பள்ளிகளில் 2009 ஜூன் 1க்கு முன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 எனவும், ஜூன் 1க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 எனவும் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே பதவி, ஒரே கல்வித் தகுதியில் ஒரு நாள் இடைவெளியில் ரூ.3170 சம்பள வித்தியாசத்தால் பணியில் சேர்ந்த 20 ஆயிரம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க 13 ஆண்டுகளாக கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.


இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாடு நீக்கப்படும் என சட்டசபை தேர்தல் அறிக்கையில் தி.மு.க., உறுதியளித்தது.


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கல்வித்துறை ஆணையரகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டங்கள் நடந்தன. இதன் எதிரொலியாக சம்பள முரண்பாட்டை தீர்க்க நிதித்துறை செயலாளர் (செலவினம்) அருண்ராய் தலைமையில் கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா, தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் கொண்ட மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியது. இதன் அறிக்கை அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.


இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், தமிழக அரசு மூன்று நபர் குழுவை அமைத்ததன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பின் நம்பிக்கை கிடைத்துள்ளது. எங்களிடம் மார்ச் 10ல் மூன்று நபர் குழு விசாரணை நடத்தியது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்து மார்ச் 20ல் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பை 20 ஆயிரம் ஆசிரியர் குடும்பங்கள் எதிர்பார்க்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி