திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2023

திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார் சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல்காரராக வேலை செய்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அவர் இறந்தார். அதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு சரஸ்வதி அதே ஆண்டு ஜூன் 5-ந் தேதி மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால் மீண்டும் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி மனு அளித்தார்.


அந்த மனுவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி நிராகரித்தார். வாரிசு வேலை கேட்டு 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று காரணமும் கூறியிருந்தார்.


அதை எதிர்த்து ஐகோர்ட்டில் சரஸ்வதி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்.


அந்த தீர்ப்பில், மனுதாரர் திருமணம் ஆனவர் என்பதால், அவர் வாரிசு வேலை பெற தகுதியானவர் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து சரஸ்வதி மேல்முறையீடு செய்தார்.


இந்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் அகிலேஷ் ஆஜராகி, திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற தகுதியில்லை என்று கர்நாடக மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் சத்துணவு உதவியாளர் மற்றும் சமையல்காரர் பதவிக்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஜி.நன்மாறன் ஆஜராகி, திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், விதிகளின்படி வேலை கேட்டு 3 ஆண்டுகளுக்குள் அவர் விண்ணப்பிக்கவில்லை என்று வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'திருமணமான பெண்கள் வாரிசு வேலை கோர முடியாது என்று கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.


அந்த தீர்ப்பின்படி, மனுதாரர் திருமணமானவர் என்பதால் அவர் வாரிசு வேலை கேட்க முடியாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை ஏற்க முடியாது. தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 4 மாதத்துக்குள் வேலை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி