தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை - மத்திய தணிக்கை அறிக்கையில் தகவல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 22, 2023

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை - மத்திய தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல் திறனில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கி இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

தமிழகத்தில் 2016-21 காலகட்டத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்கல்வியில் 94.2 சதவீதமும், மேல்நிலைக் கல்வியில் 78.6 சதவீதமும் இருந்தது. இது தேசிய விகிதத்தைவிட அதிகம். எனினும், இந்த காலத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையே 14.76 சதவீதம், 11.84 சதவீதம் குறைந்திருந்தது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.


அதேபோல, மாணவர் தேர்ச்சி விகிதத்திலும் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. 2016-21-ம் ஆண்டுகளில் 528 அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில் 515 பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் இல்லை. பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதில் முறையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.


பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் திட்டம் 2018-ல்தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாததால் திட்டம் முழுமை பெறவில்லை. அதன்பிறகு 2021-22-ம் ஆண்டு ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதில், 5.34 லட்சம் பேர் இடைநின்றவர்களாக கண்டறியப்பட்டனர். அதிலும் 1.89 லட்சம் மாணவர்கள் மட்டுமே மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.


அரசுப் பள்ளிகளில் இணை கல்வி செயல்பாடுகளை அமல்படுத்தும் திறன் குறைவாகவே இருந்தது. 11 சதவீத பள்ளிகளில் மட்டுமே என்சிசி இருந்தது. 30 சதவீத பள்ளிகளில் என்எஸ்எஸ் போன்ற இதர கல்வி இணை செயல்பாடுகள் பின்பற்றப்பட்டன. ஒட்டுமொத்தமாக செயல் திறனில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. எனவே, அரசுப் பள்ளி மேம்பாடு, இடைநிற்றல் தடுப்பு பணிகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சமீபத்தில் 10, 11, 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகளில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவர்களில்பெரும்பாலானோர் இடைநின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

 1. இவர்கள் இனி மக்களிடம் ஓட்டு கேட்டு வரமாட்டார்கள்???? கடந்த 10 ஆண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் கேட்டால் நிதி இல்லை என்று கூறி விட்டு இப்போது ஒவ்வொரு முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ என அனைவரும் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதை விவரம் தெரிந்த அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். அதே தவறை இந்த ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் கழித்து நீங்கள் நிதி நெருக்கடியை காரணமாக கூறி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிலை விடியாமல் உள்ளது.

  ReplyDelete
 2. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டையும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொண்டு அந்த வருடத்தின் கடைசி வரை ஓட்டிவிடுவார்கள். நிதி நெருக்கடியை காரணமாக சொல்லும் இரண்டு ஆட்சியாளர்கள் தங்கள் கட்சியின் முக்கிய புள்ளிகள் சேர்த்து வைத்த சொத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்க முடியும். ஆனால் இருவரும் பணிநியமனம் வழங்கி ஏழைகளுக்கு வாழ்க்கை சிறக்க முன்வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சரி நரேன்Sir. என்னசெய்யலாம் பிஜேபியை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கலாமா..... ஐந்து கிலோ மீட்டர்க்கு ஒரு தொடக்கப்பள்ளி பிறகு ஆரம்பசுகாதார நிலையம் உள்ள ஒரே ஒரு வடமாநிலங்களைக் காட்ட முடியுமா...பிஜேபி தானே அங்கு ஆட்சி செய்கிறது...வடமாநிலங்களில்கல்விஎன்பது உயர்சாதிகளுக்கு மட்டுமே
   Obc sc st community கள் தான் தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள்....கல்வி தமிழ்நாட்டில் மாணவர்கள் நலன்சார்ந்த துறையாக இயங்கிக்கொண்டுள்ளது...ஆசிரியர் பணி கொடுக்கவில்லை என்றால் ஆட்சியைக் குறை கூறுவது சுயநலமே.....பொது மக்கள் இவ்வாறு சொல்வதில்லை இம்ம்ண்ணில் Admk dmk தவிர வேறு மாநிலத்தைச் சார்ந்தவன் இங்கு ஆளமுடியாது...

   Delete
  2. வேலை வேண்டாம் சொன்னதை செய்ய சொல்லுங்க, பொய் சொல்லி ஆட்சி பிடிப்பது தேசியம் மட்டும் அல்ல திராவிடமும் தான்

   Delete
 3. திமுக ஆட்சியில் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்று நம்பி பல்வேறு நூதன பிரச்சாரம் செய்து மாற்றம் வேண்டும் என்று நினைத்த அனைவரும் இறங்கி வேலை பார்த்தோம். தகுதி தேர்வு எழுதி பின்னர் மீண்டும் நியமன தேர்வு வைக்க மாட்டேன் என்று கூறி வாக்குகள் சேகரித்த நம் முதல்வர் மீண்டும் அதே நியமனத்தேர்வு வைக்கிறார். 10 ஆண்டுகள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை. இப்போதும் நிரப்ப முயற்சி இல்லை. அனைவரும் விரக்தி அடைந்து உள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. விக் பொய் பேசும்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி