TNTET தேர்வில் குழப்பம்: சரியான விடைகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிடுக: ராமதாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2023

TNTET தேர்வில் குழப்பம்: சரியான விடைகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிடுக: ராமதாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் குழப்பம் நீடிப்பதால் ,சரியான விடைகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை மதிப்பீடு செய்ததில் பெருமளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காமல், தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் வாழ்க்கையுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் விளையாடியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.


தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் இரண்டாம் தாள் முடிவுகள் கடந்த மார்ச் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 2.54 லட்சம் பேரில், வெறும் 6 விழுக்காட்டினர், அதாவது 15,406 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது கல்வியாளர்கள் இடையே பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், விடைத்தாள்களை திருத்துவதில் நடந்த குளறுபடிகள் தான் தேர்ச்சி விழுக்காடு குறைந்ததற்கு காரணம் என தேர்வு எழுதியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


எடுத்துக்காட்டாக ‘‘இந்தியாவில் எந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து இல்லை?’’ என்ற வினாவுக்கு சிக்கிம் என்பது தான் சரியான விடை. ஆனால், மேகாலயா என்பதை சரியான விடையாக அறிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம், அந்த விடையை எழுதியவர்களுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. இதேபோல், பல வினாக்களுக்கு தவறான விடைகளை சரியான விடைகளாகக் கருதி ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் எழுப்பப்பட்டிருந்தன. அவற்றில் 20 வினாக்களுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


ஒரு வினாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் இருக்கக்கூடும். ஆனால், அது அரிதினும் அரிதான ஒன்றாகவே இருக்கும். அத்தகைய சூழலில் எந்த விடை எழுதியிருந்தாலும் அதற்கு மதிப்பெண் வழங்கப் படுவது வழக்கம். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் சரியான விடைகளாக வரையறுக்கப்பட்டவற்றைக் கூட தவறான விடைகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு, மதிப்பெண் வழங்க மறுத்துள்ளது. ஓரிரு வினாக்களுக்கான விடைகளில் இந்தக் குழப்பம் நடந்திருந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், 150&க்கு 20 விடைகள், அதாவது 13% விடைகள் தவறாக வழங்கப்படுவதை ஏற்கவே முடியாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தகுதியுள்ள பலர் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்; தகுதியற்ற பலர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரை, தவறான விடைகள் குறித்து தேர்வர்களிடமிருந்து 20 ஆயிரத்திற்கும் கூடுதலான மறுப்பு மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் தேர்வர்கள் இந்த மனுக்களை அனுப்பியுள்ளனர். இதிலிருந்தே ஆசிரியர் தகுதித் தேர்வில் நடத்தப்பட்ட குளறுபடிகள் தேர்வர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணரலாம். மறுப்பு மனுக்களை பார்த்த பிறகாவது தேர்வு வாரியம் அதன் தவறை உணர வேண்டும்.


ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தேர்வர்களின் வாழ்க்கையில் மிகவும் முதன்மையான ஒன்றாகும். இந்தத் தேர்வின் முடிவுகள் தேர்வர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைத்து விடக் கூடும். அவ்வளவு முதன்மையானத் தேர்வை இந்த அளவுக்கு குளறுபடிகளுடன் தேர்வு வாரியம் நடத்தியிருப்பது மன்னிக்க முடியாத தவறு. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தேர்வு வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும்.


ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சிறு குறை கூட இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை மதிப்பீடு செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விடைகளை கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்து சரியான விடைப்பட்டியலை தயாரிக்க வேண்டும். அதனடிப்படையில் அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்து புதிய முடிவுகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

3 comments:

  1. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி வந்தது கடந்த அதிமுக அரசு. இனி விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இப்போதும் அதைவிட மிகவும் மோசமாகி அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடக்கிறது. படித்தவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை இந்த அரசும் செய்வது வேதனையானது. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் இப்போது மீண்டும் தேர்வு.

    ReplyDelete
  2. SC / ST 40%
    BC BCM MBC 45%
    OC 50%
    இதுதான் சமூக நீதி.
    இட ஒதுக்கீட்டில் இந்தியாவின் முன்னாடி மாநிலமான தமிழக அரசு உடன் செயல்பட்டு சமூக நீதி காக்க முன் வர வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி