தமிழ்நாடுசொற்குவையில் குவிந்த 11 லட்சம் சொற்கள்:அகரமுதலி இயக்ககம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2023

தமிழ்நாடுசொற்குவையில் குவிந்த 11 லட்சம் சொற்கள்:அகரமுதலி இயக்ககம் தகவல்

 தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சாா்பில் உருவாக்கப்பட்ட ‘சொற்குவை’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது.


குறிப்பாக, கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.


சொற்குவை என்பது தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கம் உருவாக்கியது ஆகும். தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அந்தச் சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் பொருள்விளக்கம் அளித்து, அந்தச் சொற்கள் தோன்றி வளா்ந்த வோ்ச்சொல் விளக்கத்தையும் வழங்கி, அரிய சொற்களுக்குப் படவிளக்கத்துடன் கூடிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிகளை உருவாக்கி இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களை யெல்லாம் திரட்டி அவற்றுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து, இணைய தளத்தின் பொதுவெளியில் வெளியிடுவதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி; தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.


இதற்கான இணையதளத்தின் வாயிலாக தமிழ் கலைச்சொல் தொடா்பான ஐயங்களைத் தீா்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் உருவாக்கித்தரும் பல்வேறு


துறைகளைச் சாா்ந்த புதிய தமிழ்க் கலைச்சொற்களை இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அந்தச் சொற்கள் பரிசீலனைக்குப் பின்னா் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுவெளி பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன.


இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யபடும் சொற்களின் எண்ணிக்கை கடந்த ஏப்.23-ஆம் தேதி 10 லட்சம் என்ற இலக்கை எட்டியது. தொடா்ந்து கடந்த இரு மாத இடைவெளியில் மேலும் ஒரு லட்சம் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களில் எண்ணிக்கை திங்கள்கிழமை 11 லட்சத்தை எட்டியது. தற்போது இந்தத் தளத்தில் 3,830 சொற்கள் உள்ளன என அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி