பதவி உயர்விற்கு TET கட்டாயமா? RTE சட்டமும் NCTE ஆணைகளும் சொல்வதென்ன? அரசும் ஆசிரிய இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2023

பதவி உயர்விற்கு TET கட்டாயமா? RTE சட்டமும் NCTE ஆணைகளும் சொல்வதென்ன? அரசும் ஆசிரிய இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன?

 

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வி பெறும் உரிமையை வலியுறுத்தி Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE Act 2009) 27.08.2009ல் வெளியானது. இதன் பிரிவு 23(1)ன்படி 1 - 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும் என்றது.


மேலும், காலிப்பணியிடம் உருவான 6 மாத காலத்திற்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும், மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 (VI - VIII 35:1) என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்றும் சட்டமானது.


அதன்பின்னர், இச்சட்டத்திற்கான தெளிவுபடுத்தல்கள் / திருத்தங்கள் என இதுவரை 6 அறிவிப்பாணைகளை NCTE எனும் National Council for Teacher Education வெளியிட்டுள்ளது. அவற்றில்தான் TET, Minimum Qualifications, Recruiting & Promotion தொடர்பான மாற்றங்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கிய மாற்றங்களை மட்டும் பருந்துப் பார்வையில் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


23.08.2010ல் வெளியான NCTE-ன் (National Council for Teacher Education) அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்றது.

I - V :

Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS

VI - VIII

B.A., B.Sc., + D.T.Ed., & TET PASS

B.A., B.Sc., + B.Ed., & TET PASS


== == == == == == ==


NCTE 11.02.2011ல் TET தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அதன்படி 60% (90/150) மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி. ஒருமுறை தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது. ஆண்டிற்கு ஒருமுறையாவது TET தேர்வு நடத்தப்பட வேண்டும்.


== == == == == == ==


29.07.2011ல் வெளியான NCTE-ன் அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்று கல்வித் தகுதியில் சற்றே திருத்தம் செய்தது.

I - V :

Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS

Graduation + D.T.Ed., & TET PASS

VI - VIII

Graduation + D.T.Ed., & TET PASS

Graduation + B.Ed., & TET PASS


மேலும், ST / SC / OBC & மாற்றுத்திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வும் அளித்தது.


[இந்த அறிவிப்பாணை வெளிவந்த தேதிதான் இறுதியாகத் தீர்ப்பு வந்த (WA. No. 313 of 2022 etc batch IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED.02.06.2023) TET Promotion வழக்கில் தகுதி நாளாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.]


== == == == == == ==


NCTE 12.11.2014ல் அரசு / நிதியுதவி / பகுதி நிதியுதவி / தனியார் பள்ளிகளில் Pre-primary, Primary, Upper Primary, Secondary & Senior Secondary ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான குறைந்தபட்சத் தகுதிகளை வரையறுத்து NCTE Teacher Education Regulations 2014ஐ வெளியிட்டது.


அதில்தான் முதன்முறையாக பதவி உயர்வுகள் தொடர்பாக For promotion of the teachers the relevant minimum qualification are specified in the First and Second schedules are applicable for consideration  from one level to the next level என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு பரிசீலிக்க முதல் மற்றும் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகள்  பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் First schedule என்பது பொதுவான ஆசிரியர்களுக்கும், Second schedule என்பது உடற்கல்வி ஆசிரியர்களுக்குமான அட்டவணையாகும்.


முதல் (schedule) அட்டவணையில் Level 1 & 2 என்பது Pre-Primary / Nursery / KG. இதற்கான கல்வித் தகுதி Hsc., + 2year D.E.C.Ed., / B.Ed., (Nursery)


Level 3-க்கு (Primary / Upper Primary. : I - VIII) RTE Act படியான குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் Level 3-க்கான குறைந்தபட்ச தகுதிகளில் எவ்விதத் தளர்வும் அளிக்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Level 4 என்பது IX - X வகுப்புகள். இதன்மூலம் பட்டதாரிப் பணியிடங்கள் VI - VIII மற்றும் IX - X என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


Level 5 என்பது XI - XII வகுப்புகள்.


== == == == == == ==


28.06.2018ல் B.Ed தகுதியுள்ளோரை தொடக்கப்பள்ளி ஆசிரியராக நியமித்துக் கொள்ளலாம் என்றும் மேலும் அன்னார் 2 ஆண்டுகளுக்குள் ஆறுமாத தொடக்கக் கல்விப் பயிற்சியை (Bridge Course) முடிக்க வேண்டும் என்றும் NCTE அறிவிக்கை வெளியிட்டது.


== == == == == == ==


NCTE 09.06.2021ல் TET தேர்வு தேர்ச்சிச் சான்றினை 7 ஆண்டுகள் வரை என்பதிலிருந்து வாழ்நாள் முழுமையும்  செல்லத்தக்கது என்று திருத்தம் செய்து அறிவித்தது.


== ==~== ==~== ==


மேலே குறிப்பிட்டுள்ள சட்டம் & அறிவிப்பாணைகளின் வழி நாம் பின்வரும் புரிதலுக்குள் வரலாம். . . .


RTE ACT குறிப்பிடும் TET தேர்வு என்பது I - VII கற்பிக்கும் ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கானதே.


பதவி உயர்வைப் பொறுத்தவரை 12.11.2014ல் வெளியான அறிவிப்பாணைப்படி ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது மட்டுமே தற்போது இருக்கும் நிலைக்கான குறைந்தபட்ச தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் ஒரே நிலையில்தான் உள்ளது என்பதாலும், ஒரே நிலைக்குள்ளான பதவி உயர்வுகளுக்கு எவ்வித வரையறையையும் RTE ACT & NCTE வகுக்கவில்லை என்பதாலும், P-HM, BT & M-HM பதவி உயர்வுகளுக்கு தற்போதைய நிலையில் TET அவசியமில்லை.


ஆனால், இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து எதிர் வழக்காடுவதால் தீர்வு கிட்டிவிடாது. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதோ, டிட்டோஜாக் அதனுடன் இணைந்து வழக்காடுவதோ குறிப்பிட்ட ஒரு வழக்கை மட்டும் முன்வைத்து நடக்குமெனில், அடுத்தடுத்த வழக்குகள் இச்சிக்கலை கன்னித்தீவு கதையாக்கிவிடும். எனவே, மேல்முறையீடு செய்வதற்குமுன் அரசு ஒரு தெளிவான கொள்கை முடிவை வெளியிட வேண்டும். அதனை முன்வைத்து TET பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து வழக்காட வேண்டும்.


NCTE படியான அடிப்படைத் தகுதிகளைப் பொருட்படுத்தாத மாநிலங்களால் தான் தகுதித்தேர்வே கட்டாயமானது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100% NCTEன் கட்டமைப்பின் படியே ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இருந்தும் தற்போது தீர்ப்பான வழக்கில் TET எழுதாத ஆசிரியர்களை ஆசிரியர்களே அல்ல என்றும், அவர்கள் பதவி உயர்விற்குத் தகுதியே இல்லாதவர்கள் என்றும் எதிர்த்தரப்பு வாதிட்டு வழக்காடு மன்றத்தையும் ஓரளவு ஏற்க வைத்துள்ளது. இதுபோன்ற வாதங்கள் எதிர்காலத்திலும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனங்களில் RTE ACT-ஐ முன்வைத்து தெளிவான உறுதியான கொள்கை முடிவை எடுத்தாக வேண்டும்.


தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவாக, "தொடக்கக் கல்வித்துறையில் NCTE வழிமுறைகளின் படி தகுதிவாய்ந்த பாடத்திட்டம் & தேர்வுமுறைகள் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக 29.07.2011-ற்கு முன் நியமிக்கப்பட்டனர் என்பதால் அவர்களது பணி நியமனத்திற்கான அடிப்படைத் தகுதியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை; அவர்கள் அடுத்தடுத்த ஊட்டுப் பதவி உயர்வுகளை அடையத் தகுதிவாய்ந்தவர்களே; அதன்பின்னர் RTE ACT & NCTE வழிகாட்டல் படி SGT பணியிடம் TET மூலம் நேரடியாக நிரப்பப்பட்டு வருகிறது; BT பணியிடம் பதவி உயர்வின் வழி நிரப்பப்படாத சூழலில் மட்டுமே TET மூலம் நேரடியாக நிரப்பப்படும்; P-HM & M-HM பணியிடங்கள் கற்பித்தலுடன் கூடிய நிருவாகப் பணியிடங்கள்; நிருவாகப் பணியிடங்கள் 100% பதவி உயர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; பதவி உயர்வுப் பணியிடங்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் 29.07.2011-ற்கு முன் பணியேற்ற SGT / BTகளுக்கு பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் இடம்பெறுவர்; அதற்குப் பின் பணியேற்ற SGT / BTகள் TET PASS தகுதியுடன் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறுவர்" என்று சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு  அறிவிக்கலாம்.


பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை NCTE நடைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து BT & PG பணியிடங்களும் 29.07.2011 முன்னர் TRB போட்டித் தேர்வின் வழியாக மட்டுமே நிரப்பப்பட்டன என்பதால் ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தகுதியில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை; 29.07.2011க்குப் பின்னர் TET தேர்வின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்; காலிப்பணியிடங்களுக்கு மாற்று அலகில் இருந்து மாறுதலில் வரும் BT அந்த அலகிற்கான அடிப்படைத் தகுதியுடன் மட்டுமே நியமிக்கப்படுவர்; இதர BT காலிப்பணியிடங்கள் TET தேர்வின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும்; PG பணியிடம் TRB போட்டித் தேர்வின் வழி நியமிக்கப்படும்; HS-HM & HSS-HM பணியிடங்கள் கற்பித்தலுடன் கூடிய நிருவாகப் பணியிடங்கள்; நிருவாகப் பணியிடங்கள் 100% பதவி உயர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; என்று கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கலாம்.


அல்லது ஒட்டுமொத்தமாக பதவி உயர்வு நீங்கலான நேரடி BT பணியிடங்கள் மீண்டும் பழையபடி TRB போட்டித் தேர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; SGT பணியிட புதிய நியமனங்கள் TET தேர்வின் வழி மட்டுமே நடைபெறும்; என்றும் கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கலாம்.


இவையாவும் தனிநபரான எனது புரிதலுக்கு உட்பட்டவையே.


இது அறைவேக்காட்டுத் தனமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், சட்ட வல்லுநர்கள் - ஆசிரியர் இயக்கத்தினர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழுவை அமைத்து அரசு செயல்படுமாயின் இதிலும் மேலானா ஒருநிலைப்பாட்டை உறுதி எடுக்க இயலும்.


அத்தகைய முடிவிற்குள் அரசு வராமல் எத்தனைமுறை வழக்காடினாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அவ்வளவு ஏன் பதவி உயர்வை முழுமையாகவே மேற்கொள்ள முடியாத அளவிற்கு மென்மேலும் தீர்ப்புகள்கூட வெளிவரலாம்.


ஒட்டுமொத்தமாக முதல் & அடிப்படைத் தேவை என்பது உறுதியான - சட்டப்பூர்வமான - தெளிவான கொள்கை முடிவே. அதனை அரசு தானாகவே சரி செய்துவிடும் / மேல்முறையிட்டு வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தையோடே அமைதியாகிவிடக்கூடாது. ஏனெனில் தற்போதைய நிலைக்குக் காரணமே அரசின் தனித்த செயல்பாடுகளே.


எனவே, கொள்கை முடிவு செயலாக்கத்தில் சட்ட வல்லுநர்களோடே தனது இருப்பையும் டிட்டோஜாக் உறுதி செய்வதோடு, பள்ளிக்கல்வித்துறை இயக்கங்களையும் இச்செயல்பாடுகளில் இணைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.


வந்ததைத் தீர்க்கவும் வரும்முன் காக்கவும், கொள்கைகளை முறையாக வகுப்போம்!


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

1 comment:

  1. Mothatthil tet entral velai parkum aasiriyarkalin vayitril puliyai karaikuthu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி