பள்ளிக்கல்வியில் சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில், மாவட்ட கலெக்டர்களா, அரசு செயலரா என்ற பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதனால், 10 நாட்களாக சி.இ.ஓ.,க்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வியில், சி.இ.ஓ., எனப்படும் வருவாய் மாவட்ட அளவிலான முதன்மை கல்வி அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாறுதலை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தான் மேற்கொள்வார். இந்த உத்தரவின்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும்,பணி நியமனங்களை பின்பற்றுவர்.
இதுவரை இல்லாத வகையில், தமிழக அரசில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவை, கலெக்டர்கள் பின்பற்றாமல், அதனை அலட்சியம் செய்யும் சம்பவம், 10 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
பள்ளிக்கல்விக்கும், கலெக்டர்களுக்கும் இடையே நடக்கும் இந்த பனிப்போர், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழப்பம்
அதன் விபரம்:
கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை மாவட்ட சி.இ.ஓ., பதவிகளுக்கு, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கடந்த, 11ம் தேதி, இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, கோவை மாவட்ட சி.இ.ஓ., சுமதி பணி விடுவிப்பு பெற்று, புதிய இடமான ராணிப்பேட்டையில் பணியில் சேர சென்றார். ஆனால், திருப்பூருக்கு மாற்றப்பட்ட, ராணிப்பேட்டை சி.இ.ஓ., உஷா, ராணிப்பேட்டை பணியில் இருந்து விலகவில்லை.
இதனால், ராணிப்பேட்டை வந்த சுமதி, எங்கே பணியில் சேர்வது என தவித்தார். இந்த விவகாரம் அறிந்த, திருப்பூர் சி.இ.ஓ., பாலமுரளி, தன் புதிய இடமான கோவைக்கு மாற தயங்கினார்.
சுமதி மீண்டும் கோவை மாவட்ட பணியில் சேரலாம் என, காத்திருந்தார். ஆனால், கோவைக்கு சுமதியும் அனுப்பப்படவில்லை. பாலமுரளியும் சேரவில்லை. அதனால், கோவைக்கு சி.இ.ஓ., இல்லாமல், கடந்த, 21ம் தேதி வரை, 10 நாட்களாக பிரச்னை நீடித்தது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி செயலகம் தரப்பில், தீர்வு காண முயற்சித்த போது, திருப்பூர் மாவட்டத்துக்கு, சி.இ.ஓ., உஷா வருவதை விட, வேறு யாரையாவது அனுப்புங்கள் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இடமாறுதல் உத்தரவில் திருத்தம் செய்து, கரூர் சி.இ.ஓ., கீதாவை திருப்பூருக்கும், கோவையில் இருந்து விலகிய சுமதியை, கரூருக்கும் மாற்றி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கடந்த, 21ம் தேதி புதிய உத்தரவிட்டார். இத்துடன் இந்த பிரச்னை முடியும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்தனர்.
புதிய பிரச்னை
இதையடுத்து, பழைய உத்தரவின்படி, திருப்பூர் சி.இ.ஓ. பாலமுரளி, நேற்று முன்தினம் கோவையில் அவசரமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற பணியிடங்களுக்கும், சி.இ.ஓ,க்கள் இடம் மாற முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், அவர்கள் புதிய பணியிடத்தில் சேர முடியாமல், மீண்டும் ஒரு பிரச்னை கரூரில் துவங்கியது.
அதாவது, கரூர் சி.இ.ஓ., கீதா தன் இடமாறுதல் குறித்து, கலெக்டர் பிரபுசங்கருக்கு தகவல் அளித்துள்ளார். அதைக் கேட்ட, கலெக்டர் அவரை பணியில் இருந்து விலக அனுமதிக்கவில்லை என, கூறப்படுகிறது.
அதனால், கீதா கரூரில் இருந்து பணி விடுவிப்பு பெறவில்லை.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் திருப்பி அனுப்பப்பட்ட சுமதி, கரூரிலாவது பணியை துவங்கலாம் என, சென்றார்.
அங்கே கீதா பணி விலகாமல் நீடித்தார். இதனால், நேற்று இரவு வரை, சி.இ.ஓ. சுமதி கரூரில் பணியேற்கவில்லை. திருப்பூர் சி.இ.ஓ., பணியிடத்தில் கீதாவும் சேராமல், அந்த இடம் காலியாக உள்ளது.
நிர்வாக குளறுபடி?
சி.இ.ஓ., இடமாறுதல் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசின் முதன்மை செயலர் இடையிலான இந்த பனிப்போர், அரசு தரப்பிலும், பள்ளிக்கல்வி தரப்பிலும் சர்ச்சைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கலெக்டர்கள் பொதுவாக இணை செயலர் அந்தஸ்தில் உள்ளவர்கள்.
அவர்களுக்கு இரண்டு பணி நிலை உயர்வான, அரசின் முதன்மை செயலர் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றாமல் இருப்பது, தமிழக அரசின் நிர்வாக குளறுபடிகளை வெளிப்படையாக காட்டுவதாக, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
முதலில் மாற்ற வேண்டியது கார்ல் உஷாவை
ReplyDelete