மாவட்ட கல்வி அலுவலருக்கு சிறை தண்டனை - நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2023

மாவட்ட கல்வி அலுவலருக்கு சிறை தண்டனை - நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலராக இருந்த சாமி சத்தியமூர்த்திக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதித்த தனிநீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்திவைத்தது.


சிவகங்கை மாவட்டம் சருகணி செயின்ட் ஜோசப்ஸ் நடுநிலை பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு:


பள்ளியில் தையல் ஆசிரியையாக ஞான சகாய மேரி நியமிக்கப்பட்டார். அதை அங்கீகரித்து பணப்பலன்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் 2015 ல் மனு செய்தோம்.


தனிநீதிபதி, 'பணி நியமனத்தை அங்கீகரித்து பணப்பலன்களை வழங்க வேண்டும்' என 2018 ல் உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரியாக இருந்த சாமி சத்தியமூர்த்தி (தற்போது பணி ஓய்வு) மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


ஏற்கனவே விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த்: சாமி சத்தியமூர்த்தி 2018 முதல் 2020 வரை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலராக பணிபுரிந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வில்லை. தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது எனக் கூறுவதைத்தவிர, ஏற்புடைய சரியான பதில் அவரிடம் இல்லை.


வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார். நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினாலும் அது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் சாமி சத்தியமூர்த்திக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து சாமி சத்தியமூர்த்தி, 'முதலில் தனிநீதிபதி உத்தரவிட்ட காலகட்டத்தில் அங்கு நான் பணிபுரியவில்லை.


அவரது உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. சிறை தண்டனை விதித்த தனிநீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து, ரத்து செய்ய வேண்டும்' என மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனிநீதிபதியின் உத்தரவு 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என, உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி