அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணுதல், பன்முக சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பது போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது. பொதுவாக, முந்தைய அனுபவங்களைக் கொண்டு இயந்திரத்தைக் கற்கச் செய்தல், எதிர்கொள்ளும் தீர்வுகளுக்கேற்பத் தானாக மாற்றிக் கொள்ளுதல், மனிதனைப் போல் சிந்தித்துப் பிரச்சனைகளின் முடிவுகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிதல், சரியான முடிவுகளைச் செயல்படுத்துதல் முதலானவற்றை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்கிறது.
இத்தகைய நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு கற்றல் கற்பித்தல் காணொலிகள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் முயற்சியில் ஒரு சிலர் முயன்று வருவது எண்ணத்தக்கது.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எதிர்வரும் காலங்களில் மருத்துவம், மின் வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தரவு பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக ஊடகங்கள், தானியங்கிக் கருவிகள் மற்றும் எந்திர மனித உற்பத்திப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. கல்வித் துறையில் இதன் வருகை ஒரு புதிய மைல் கல்லாக அமையப் போகிறது.
இப்போதும் பல்வேறு சமூக ஊடகங்களில் எல்லோர் மனங்களிலும் நீங்காமல் நிலைத்து நிற்கும் மறைந்த தேசிய தலைவர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், நடிகர் நடிகைகள், கற்பனைக் கதை மாந்தர்கள் முதலான நபர்களின் நிழற்படம் மற்றும் காணொலிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மீட்டுருவாக்கம், உருவாக்கம் செய்யப்பட்டவற்றைக் கண்டு களித்து வியக்கும் போக்குகள் அதிகரித்து வருகின்றன.
கேரள மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கணவனின் தவறான நடத்தையைக் கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து வழக்கு பதிந்து நியாயம் கேட்ட சேதி ஊரறிந்த ஒன்று. அறிவியல் புது கண்டுபிடிப்புகளில் இதுபோன்ற எதிர்மறையான தவிர்க்க முடியாத சிதைந்த நோக்கத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஆகும். ஆல்பிரட் நோபல் அதனை மாற்றி யோசித்து உருவாக்கியதை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் இருபெரும் நகரங்களில் அவற்றைப் பரிசோதிக்க முடிவு செய்து பெரும் நாசம் விளைவித்ததை யாரும் மறக்க முடியாது.
இதுபோன்ற அல்லது இதைவிடவும் மிகப்பெரிய மனித ஆக்கப் பேரிடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வித்திட்டால் என்ன செய்வது என்று பல்வேறு வளர்ந்த நாடுகளும் இத்தொழில்நுட்பப் பயன்பாட்டை எதிர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தொழில்நுட்பம் பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு புதுமைகளைப் படைக்க இருப்பதாக அறியப்படுகிறது. அதேவேளையில், இதனால் மனித சமூகத்துள் பலவித குழப்பங்கள், ஆபத்துகள், பணி இழப்புகள், மனநெருக்கடிகள் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகள் தொடக்கத்தில் எழும் என்பது நிச்சயம்.
எனினும், இஃது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. இதுபோன்றவற்றைத் தடுக்க நினைப்பதும் முடியாத நிலையில் இயலாமையால் வருந்துவதும் அறிவீனம் ஆகும். மனித வேலையிழப்பை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. ஆள் விரயம், கால விரயம், நேர விரயம், பண விரயம், மன உளைச்சல் விரயம் போன்றவை இதனால் பெருமளவில் தவிர்க்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து எண்ணிப் பார்ப்பது அவசியம்.
இன்றைய சூழலில் எந்தவொரு மின் சாதனங்கள், தகவல்தொடர்பு கருவிகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வசதிகளையும் நுகர்வுத் தன்மைகளையும் வெகுவாகக் குறைத்துக் கொள்வதை நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும். மனித மனம் அவற்றிற்கு அடிமையாகிவிட்டது. ஒரு கட்டத்தில் இவற்றின் பாதகங்களைக் கடந்து போகவும் சாதகங்களை நினைந்து போற்றவும் பழகிக் கொண்டு விட்டோம் என்பதுதான் உண்மை.
சரி. கல்வியில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு சரியாக விடையளித்து எனில், வகுப்பறைகளில் இத்தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளைத் துல்லியமாக விளைவிக்கும். அதாவது, மகாத்மாவைப் பாட வைக்கலாம். நேரு மாமாவை ஆட வைக்கலாம். நேதாஜியை வீர உரையாற்றச் செய்யலாம். வேலுநாச்சியாரைப் போரிடச் செய்யலாம். புரட்சியாளர் அம்பேத்கர் போதிப்பதைக் கேட்கச் செய்யலாம். கவிக்குயில் சரோஜினியைக் கவி பாட வைக்கலாம். மகாகவி பாரதியை உணர்ச்சிப் பெருக்குடன் கவிதை எழுதச் சொல்லலாம். இவையனைத்தையும் இன்றையக் காலச் சூழலில் தத்ரூபமாக வியக்கத்தக்க வகையில் இப்போது செய்து காட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழிகோலும்.
இதுபோன்ற நிகழ்வுகள் கற்பித்தலில் ஆசிரியர் பணியை வெகுவாகக் குறைக்க உதவிடும். புதுமை - இனிமை - எளிமை அடிப்படையில் கற்பித்தல் பணிச்சுமை இலகுவாகும். இதற்கு நேர்மாறாக, கற்றலில் துரிதமும் துல்லியமும் மகிழ்ச்சியும் நீடித்து நிலைத்தலும் மிகும். எத்தகைய காணொலிகளையும் இதனால் மிக விரைவாக உருவாக்க முடியும். பல்வேறு கேலிச்சித்திர இயங்குபடம் அடங்கிய தொகுப்பு குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து கற்றல் சுமையாகவும் தண்டனையாகவும் வலியாகவும் வேதனையாகவும் அல்லாமல் விரைவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் ஆனந்தமாகவும் நிகழ அதிகம் வாய்ப்புண்டு.
எந்தவித ஐயப்பாடுகளையும் அவை சார்ந்த தீர்வுகளையும் விளக்கங்களையும் தேடித் திரியும் அவசியம் இல்லை. ஓப்பன் ஏஐ சாட் ஜிபிடி (Open AI ChatGPT) மூலம் நொடிப் பொழுதில் விடைகளாகப் பெறவியலும். இதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் காலப்போக்கில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது.
தானே கற்றலுக்கு இஃதொரு நல்ல எந்திர ஆசிரியர் (AI-Teacher) ஆகும். அதற்குத் தான் கூகுள் (Google) தேடுபொறி இருக்கிறதே என்று அங்கலாய்ப்பது சரியாகாது. பல்வேறு இயங்குதளத்தைச் சுட்டிக்காட்டி உரிய தரவுகளைத் தேடிக் கண்டடைவது தேடுவோரின் கடினப் பணியாக உள்ளது. ஆனால், இஃது அவ்வாறு கிடையாது. கையிலே காசு வாயிலே இனிப்பு என்பது போல வினாத் தொடுத்த மறுநொடியே சுடச்சுட விடைகளைச் சிறியதாகவும் பெரிதாகவும் அளவாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் போதும் போதும் என்று கொட்டிக் கொண்டிருக்கும்.
தற்போது ஆங்கிலத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழியில் போதுமான தரவுகள் வழங்கப்படுவது இன்று குறைவானதாக உள்ளது. ஆனால், நாளை அவ்வாறு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், தேர்வின் போது ஒரு மாணவனிடம் இது கிடைக்குமேயானால் அபாயகரமானது. படிக்கவே வேண்டியதில்லை. எதையும் நொடிப் பொழுதில் தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராபத்து இதில் உள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கல்வித்துறை எதிர்காலத்தில் போராடும் என்பது திண்ணம்.
இத்தகைய நிலையில், கல்வித்துறை நிர்வாகத்தில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படுமேயானால், ஆசிரியர் பணியும் பணியிடமும் கேள்விக்குள்ளாகக் கூடும். இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமே மனித வளத்தை வெகுவாகக் குறைத்து நிறைவான அடைவைப் பெறச் செய்வதாகும். பள்ளிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளால் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக ஐந்து தொடக்கப்பள்ளிகளோ, நடுநிலைப்பள்ளிகளோ, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோ பிணைக்கப்பட்டு ஒரு குறு கற்றல் வள மையம் தோற்றுவிக்கப்பட்டு சுழற்சி முறையில் தகுதியும் திறமையும் அனுபவமும் பயிற்சியும் நிறைந்த பாட ஆசிரியர்கள் எடுக்கும் இணையவழி இடைவினை வகுப்பு(Online Mutual Response Class)களால் கல்வி வளப்படுத்தப்படும்.
தவிர, ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் பீட்டர் நார்விக் எனும் ஆசிரியர்கள் முன்மொழிந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அ) எதிர்வினை இயந்திரங்கள் (Reactive Machines), ஆ) வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory), இ) மனதின் கோட்பாடு (Theory of Mind), ஈ) சுய விழிப்புணர்வு (Self-Awareness) ஆகியவற்றுள் மனதின் கோட்பாடு (Theory of Mind) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சமூக நுண்ணறிவு (Social Intelligence) கொண்டதாக அமைக்கப்படுகின்றன. இவை மனித நோக்கங்களை ஊகித்து அறிவதுடன், அவர்தம் நடத்தையைக் கண்காணிக்கவும் முடியும். இவை மனிதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதன் காரணமாக கல்வியில் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கக் கூடும்.
இதற்கு இயந்திர வழிக் கற்றல் (Machine Learning) மற்றும் அதன் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) ஆகியவை கற்போருக்கு மிகுந்த உதவிக்கரமாக விளங்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. செயற்கை நுண்ணறிவு தானியக்க எந்திர செயல்முறை (AI Robotic Process Automation) மூலமாக கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கும் செயல்பாடுகள் ஊடாக மதிப்பீட்டு முறைகளும் அதன் வழியாகக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் குறைதீர் நடவடிக்கைகள் போன்றவை நிகழ்த்தும் நோக்கும் போக்கும் காலப்போக்கில் ஆசிரியர் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் துல்லியமும் துரிதமும் மிக்கதாக இருக்கும். மனித விருப்பு வெறுப்பிற்கு ஈண்டு இடமில்லை.
காட்டாக, ஐந்து பாட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணியை ஓர் AI எந்திரம் செய்து விடும். மனிதப் பிழைகள் மாதிரியான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இதில் மிகக் குறைவு. பயனர்க்கு இடையேயான நட்பு (User Friendly) இதனால் வலுப்படும். மேலும், இன்றைய தொழில்நுட்ப கருவிகள் மீதான இனம் புரியாத ஈர்ப்பின் காரணமாகக் குழந்தைகளிடம் கற்றலானது விரைந்து நிகழும். போதிப்பவர் என்ற நிலையிலிருந்து ஆசிரியர் மாணவர் கற்பதற்கான வளங்களையும் வசதிகளையும் சூழலையும் ஏற்படுத்தித் தரும் நபராக (Facilitator) அறியப்படுவார்.
ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விளைவிப்பது இங்கு நோக்கமல்ல. வேகமாக மாறி வரும் உலக நடப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புரியவிருக்கும் அபரிமிதமான மாயவித்தைகள் மற்றும் விந்தைகள் குறித்த போதிய விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் நோக்கி நகர முனைவதும் முனைப்புக் காட்டுவதும் இன்றியமையாதது என்று ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொள்வது நல்லது. 2030 களில் இப்போதுள்ள மரபுவழி வகுப்பறை (Chalk and Talk Class) திறன்மிகு வகுப்பறை (Smart Class) நிலையைக் கடந்து செயற்கை நுண்ணறிவு வகுப்பறை (AI Class) யாக உருவாக்கப்பட்டிருப்பது கண்கூடு.
இப்படித்தான் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வருகைப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகள் கல்வியில் மெல்ல நுழைக்கப்பட்ட போது பலரும் இதெல்லாம் கொஞ்ச காலம் தான் நீடிக்கும் என்று வெளிப்படையாகப் புலம்பியது அறியத்தக்கது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் கல்வித்துறையில் எல்லாம் எமிஸ் மயம் (EMIS for All) என்கிற நிலைமைக்கு இன்று கொண்டு வந்து விட்டிருப்பதை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த கொசுக்கடியையே இன்றுவரை ஆசிரியச் சமூகத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்களது ஐந்து முதன்மைக் கோரிக்கைகளுள் ஒன்றாக எமிஸ் ஒழிப்பு கட்டாயம் இடம்பெறுவது வியப்புக்குரியது மட்டுமல்ல வேதனைக்குரியதுமாகும்.
ஏனெனில், ஒருபோதும் எமிஸ் கல்வியில் ஒழியாது; ஒழிக்கவும் யாராலும் இயலாது. அதனுடன் வாழப் பழகிக் கொள்வதுதான் அனைவருக்கும் நல்லது என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக அன்றாடம் புதுப்புது புதுப்பித்தல் பணிகள் நடைபெற்ற வண்ணம் இருப்பதே சாட்சியாகும். அடுத்து ஒரு சில ஆண்டுகளில் கல்வியில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க இருக்கும் செயற்கை நுண்ணறிவு பட்டத்து மதயானையை (Glory of AI) எவ்வாறு இந்த ஆசிரியர் சமூகம் எதிர்கொள்ளப் போகிறது என்பது மில்லியன் பிட்காயின் கேள்வியாக இருக்கிறது.
எனினும், கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் குறியீட்டு அறிவை (Coding Knowledge) கற்றுக்கொள்ள முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மேலும், பிற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக தோற்றுவிக்கப்படும் ஆளில்லா வகுப்பறை (Unmanned Classroom) நோக்கி நகரும் கல்வியைச் சமாளிக்கவும் அதன் அறைகூவல்களைத் திறம்பட எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வலியது வாழும் (Survival of Fittest) எனும் கோட்பாட்டிற்கேற்ப தம்மைத் தயார்படுத்திக் கொள்வது இளம் தலைமுறை ஆசிரியர்களின் இன்றியமையாத கடமையாகும்.
எழுத்தாளர் மணி கணேசன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி