மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் இன்று (செப்.29) நடைபெறவிருந்த கல்வி உதவித் தொகைக்கான யாசஸ்வி நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிரதமர் – யாசஸ்வி (Prime Minister – Young Achievers Scholarship Award Scheme for Vibrant India) கல்வி உதவித் தொகைக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஜூன் மாதத்தில் அறிவித்தது. இந்த தேர்வை எழுத நாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்,
பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்பன போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்த 6,593 பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (செப்.29) நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், நுழைவுத் தேர்வுக்கு பதிலாக, தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் தற்போது 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் தேசிய உதவித் தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கெனவே நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளும் இதற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வருமான எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கல்வி உதவித் தொகைக்கான யாசஸ்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளில் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன.
இந்த நிலையில், இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு, 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வி உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பை பொறுத்தவரை அரசு பொதுத் தேர்வாக நடைபெறுகிறது. ஆனால், 8-ம் வகுப்புக்கு மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே விடைத் தாள்கள் திருத்தப்படுவதால் அந்த மதிப்பெண்களை மற்ற பள்ளிகளுடன் ஒப்பிட்டு தரப்படுத்துவது சரியான நடைமுறையாக இருக்காது.
ஒவ்வொரு பள்ளிக்கும் மதிப்பீடு செய்யும் முறைகளும் மாறும். எனவே, 8-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களுடன் மாநில அளவில் அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு மதிப்பெண்களை வழங்கலாம். மேலும், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி