இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் உறுதி!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2023

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் உறுதி!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மயங்கிவிழுந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.


தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கடந்த 28-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.


இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த28-ம் தேதி சென்னை பழைய டிபிஐவளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அன்று இரவு கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.


இந்நிலையில், 2-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது: ஊதிய முரண்பாட்டை களையக் கோரி 14 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.அதிமுக ஆட்சியில் நாங்கள் போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.


திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில், நேற்று டிபிஐ வளாகத்துக்கு வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.


இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி முன்னுரிமை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் ‘டெட்' ஆசிரியர்களுக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியோரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இயக்குநருடன் பேச்சுவார்த்தை: இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தொடக்க கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சங்க நிர்வாகிகளை நேற்றுமாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.


இதையடுத்து, இடைநிலை பதிவுமூப்புஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் அவரது அலுவலகத்துக்கு சென்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரைபோராட்டத்தை கைவிட மாட்டோம் எனநிர்வாகிகள் உறுதியாக கூறியதால் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் உறுதியளித்தார்.

3 comments:

  1. ஏன் அதிகாரி சொன்னாதான் அமைச்சர் நகர் வலம் வருவாரோ?! உங்கள் ஆட்சிக்கு மன்னர் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை

    ReplyDelete
  2. இந்த பிராடு அமைச்சர்களை காட்டிலும் ADMK பிராடு அமைச்சர்கள் பரவாயில்லை

    ReplyDelete
  3. ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.சொன்னதை செய்ய சொல் உன் அமைச்சரை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி