செல்ஃபியுடன் பூமி, நிலவை படம் எடுத்த ஆதித்யா விண்கலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2023

செல்ஃபியுடன் பூமி, நிலவை படம் எடுத்த ஆதித்யா விண்கலம்

 

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், ஒரு செல்ஃபியுடன் நிலா மற்றும் பூமியை சேர்த்து ஒரு படம் எடுத்து அனுப்பியிருக்கிறது.


ஆதித்யாஎல்-1 விண்கலத்தில் இருக்கும் கேமரா மூலம், தன்னைத் தானே ஒரு செல்ஃபி எடுத்துள்ளது. தொடர்ந்து, பூமி மற்றும் அதற்கருகே மிகச் சிறிய நிலா என சேர்ந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தையும் எடுத்துள்ளது. இதனை விடியோவாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


ADVERTISEMENT

அந்த விடியோவில், சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2ஆம் தேதி இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் தன்னை எடுத்த செஃல்பியும், தொடர்ந்து அரைவட்டத்தில் பூமியும், அதற்கு அருகே மிகச் சிறிய அளவில் நிலவும் தெரிகிறது. பூமி மெல்ல சுற்றும்போது, நிலவு பளிச்சென தெரிந்து பிறகு சிறியதாக மாறுகிறது. நிலவு இருக்கும் பகுதியை இஸ்ரோ அம்புக்குறியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.


சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையானது புதன்கிழமை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக உயா்த்தப்பட்டது.


ஆதித்யா-எல்1 விண்கலமானது பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக கடந்த சனிக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புவியின் தாழ்வட்டப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.


இந்நிலையில், விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையானது முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுப் பாதையானது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 245 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 22,459 கி.மீ. தொலைவிலும் இருக்கும்படி அதிகரிக்கப்பட்டதாக எக்ஸ் சமூக வலைதளத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இந்தப் பணி பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆதித்யா-எல்1 விண்கலம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், 2-ஆவது கட்ட சுற்றுப் பாதை மாற்றியமைப்புப் பணிகள் வரும் 5-ஆம் தேதி அதிகாலை சுமாா் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.


பலகட்ட சுற்றுப்பாதை மாற்றியமைப்புக்குப் பிறகு ஆதித்யா-எல்1 விண்கலமானது, பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்1 புள்ளியை 125 நாள்களில் அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி