01.11.2023 முதல் Attendance தவிர Appல் வேறு எந்த பணிகளை செய்ய மாட்டோம் - TETOJAC தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2023

01.11.2023 முதல் Attendance தவிர Appல் வேறு எந்த பணிகளை செய்ய மாட்டோம் - TETOJAC தீர்மானம்

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 27.10.2023 மாலை 6.30 மணிமுதல் 8.00 மணிவரை காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமை ஏற்றார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 


தீர்மானம் 1


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜேக் 30 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி 13.10.2023 அன்று சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திட முடிவு செய்து அதற்குரிய பணிகளை மேற்கொண்டது. 


இந்நிலையில் 11.10.2023 அன்று மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 


அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் 12.10.2023 அன்று மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 


அப்பேச்சுவார்த்தையில் 30 அம்சக்கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நல்லெண்ண நடவடிக்கையாக 13.10.2023 அன்று நடைபெறுவதாக இருந்த சென்னை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைப் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்திட டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு முடிவு செய்தது. 


அதன்படி 13.10.2023 அன்று காலை 11.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் டிட்டோஜேக் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஏற்பு செய்யப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உறுதிமொழி அளித்தனர். இந்நிகழ்வானது தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.


ஆனால் மேற்கண்டவாறு பேச்சுவார்த்தை நடைபெற்று 15 தினங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களது பேச்சுவார்த்தையில் ஏற்பு செய்யப்பட்ட 12 கோரிக்கைகளில் எந்தவித கோரிக்கை தொடர்பாகவும் தொடக்கக்கல்வித்துறை இதுவரை எவ்வித உத்தரவையும் வெளியிடாதது ஒட்டுமொத்த தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை டிட்டோஜேக் மாநில அமைப்பு கல்வித்துறை இயக்குநர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறது.


எனவே இனியும் தாமதிக்காமல் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடனான பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகள் தொடர்பான உத்தரவுகளையும் விரைந்து வழங்கிட டிட்டோஜேக் மாநில அமைப்பு தங்களை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 2


டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் 16.10.2023 முதல் ஆசிரியர் வருகைப்பதிவு, மாணவர் வருகைப்பதிவு ஆகிய பதிவேற்றங்கள் தவிர கற்பித்தல் பணியினைப் பாதிக்கும் பிற எவ்விதப் பதிவேற்றங்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை என முடிவு செய்து அறிவித்திருந்தோம். 


இந்நிலையில் 11.10.2023 அன்று மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும், அதன் பின்னர் 12.10.2023 அன்று மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் 01.11.2023 முதல் ஆசிரியர்கள் EMIS இணையதளப் பதிவேற்றும் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதற்கான ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.


எனவே, பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டபடி 01.11.2023 முதல் ஆசிரியர்கள் ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவு தவிர கற்பித்தல் பணியினைப் பாதிக்கும் பிற எவ்வித பதிவேற்றப் பணிகளையும் மேற்கொள்ளாமல் தங்களை விடுவித்துக்கொள்வது எனவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர் மதிப்பீடு, தேர்வு உள்ளிட்ட இணையவழிப் பதிவேற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவுசெய்து அறிவிக்கிறது.


இப்படிக்கு


மட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்

1 comment:

  1. *நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வருகிறது பாண்டு (Bond) முறை.. ஆசிரியர்கள் அதிர்ச்சி..*

    *தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளாய் அள்ளி வீசிய திமுக அரசும் இவற்றையெல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது... இந்நிலையில் தான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வண்ணம் என்ன செய்யலாம் என்ற யோசனையில் உள்ளது திமுக அரசு.. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியப்பலன்களை பணமாக வழங்காமல் பாண்டு முறையில் வழங்க முடிவு செய்துள்ளது... அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியப்பலன்களை பணமாக வழங்காமல் பாண்டு மூலம் 5 வருடங்களுக்குப் பின் எடுத்துக் கொள்ளும் வண்ணம் புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது தமிழக அரசு.. இவ்வாறு செய்வதன் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் என்பதால் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஏனைய ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்வு காணலாம் என்று முடிவு செய்துள்ளது... இதன் மூலமாக அனைத்து ஆசிரியர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும் அதே நேரம் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து போராட முடியாது என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளது.. ஆசிரியர்களை பொருத்தவரையில் இந்த பாண்டு கொடுக்கும் முறை தொடங்கப்பட்டால் இனிமேல் எந்தக்காலத்திலும் பாண்டு தான் வழங்கப்படும் என்பதாலும் அதை சாமானியமாக மாற்ற இயலாது என்பதாலும் 50 வயதைக் கடந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்... இத்தகவல் காட்டுத் தீ போல பரவுவதால் கல்வித்துறை பரபரப்பாகி உள்ளது* ..

    *நமது சிறப்பு நிருபர்*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி