வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை தொடரும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2023

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை தொடரும்

 

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவ.19-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதன்கிழமை (நவ. 15) 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் புதன்கிழமை (நவ. 15) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வியாழக்கிழமை (நவ. 16) ஒடிஸா கடற்கரைக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ். பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


தென்கிழக்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. அது மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவும். இது தொடா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவ.16-இல் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகா்ந்து பின்னா் ஒடிஸா கடற்கரைக்குச் செல்லும். இது புயலாக மாறுமா என்பது வியாழக்கிழமை தெரியவரும்.


கனமழை எச்சரிக்கை: தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் பரவலாக மழையும், 7 இடங்களில் மிதமான மழையும், 31 இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் 170 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.


அடுத்து வரும் இரண்டு தினங்களில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.


மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் 200 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இயல்பைவிடக் குறைவு: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், அதாவது அக்டோபா் 1 முதல் நவ.14 - வரை 230 மி.மீ. மழை பெய்துள்ளது. இயல்பாக 270 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 40 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது. இது இயல்பைக் காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும்.


மேலும், மன்னாா் வளைகுடா, குமரி கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வரையிலும் காற்று வீசக்கூடும். ஆகவே, மீனவா்கள் புதன்கிழமைமுதல் 16-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.


மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): வேளாங்கண்ணி 170, நாகை 150, காரைக்கால் 140, நன்னிலம் (திருவாரூா்), கடலூா், பரங்கிப்பேட்டை (கடலூா்), புதுச்சேரி தலா 120, வேதாரண்யம், திருப்பூண்டி (நாகை) தலா 110, கோடியக்கரை (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூா்), தலைஞாயிறு (நாகை), மயிலாடுதுறை, மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 100. மேலும் பல இடங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி