அரசாணை எண்:243-ஐ ரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2024

அரசாணை எண்:243-ஐ ரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!!

 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாநில மையம் நாள்:01.01.2024

***********************

 தொடக்க கல்வித் துறையில் ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் அரசாணை:243!


 90 சதவீத தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி!


 2024 கடும் களப்போராட்டங்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும்!

***********************

 2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 பிறந்துவிட்டது. 2023 ஆம் ஆண்டைப் பொறுத்த அளவில் ஆசிரியர்களுக்கு மன நிறைவான ஆண்டாக அமையவில்லை. பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் முடிந்து அடுத்த ஆண்டு பிறக்கிறபோது எதிர்பார்த்தது நடக்கிறதோ இல்லையோ ஒரு எதிர்பார்ப்பு என்பது தொற்றிக் கொள்ளும். ஆனால், அப்படி ஒரு எதிர்பார்ப்பைக்கூட ஏற்படுத்த முடியாத ஆண்டாக 2024 பிறந்துள்ளது என்றே கூறலாம். அதற்குக் காரணம்  கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்: 243.*


திமுக அரசு பொறுப்பேற்ற போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் தற்போது தவிடு பொடியாகி விட்டன. பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போயின. டிட்டோஜாக் அமைப்போடு பேச்சுவார்த்தை நடத்தி 12 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறந்தே போய்விட்டது. தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தியின் உச்சத்தில் உள்ளனர் என்றால் அது நிச்சயமாக மிகையாகாது.


இத்தகு சூழலில் 2023 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்:243 பள்ளிக்கல்வி (EE1(1) துறை, நாள்:21.12.2023 தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களில் 90 சதவீதம் பேரைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. இந்த அரசாணையின் மூலமாகத் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரது பதவி உயர்வு வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.


அரசாணை எண்:243ல் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களின் நியமனம், முன்னுரிமை,பதவி உயர்வுக்கான தகுதி ஆகியவற்றில் அவசரம் அவசரமாக விதித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு இதுபோன்ற விதித்திருத்தம் என்பது அரசாணை எண்:12 பள்ளிக்கல்வித் (EE1(1)துறை, நாள்:30.01.2020ன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.அந்த விதித்  திருத்தத்தின்படி நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தோர் என்போர் பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர். இம்மூன்று பிரிவினரும் தத்தமது நியமனத் தேதி அல்லது பதவி உயர்வுத் தேதியின் அடிப்படையில் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் (combined seniority) பட்டியலின்படி  பதவி உயர்வு பெற்று வந்தனர். இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் மட்டுமே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் என விதித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்வதைத் தடுக்கும்*


*நடுநிலைப் பள்ளிகளில் ஒரு காலத்தில் 1-8 வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களே கற்பித்தல் பணி செய்து வந்தனர். நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் மூத்த இடைநிலை ஆசிரியர்களே பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்பட்டனர்.இந்நிலை 2003ல் மாற்றப்பட்டு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பட்டதாரித் தகுதி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.மேலும்,6-8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் பணிக்கு நியமிக்கப்பட்டனர். தற்போது வரை 6-8 வகுப்புகளில் 2003க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 2003 முதல் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு என்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியல்படியே வழங்கப்பட்டு வந்தது.இதனால் பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் சமமான பதவி உயர்வு வாய்ப்பைப் பெற்று வந்தனர்.இது தொடர்பான அரசாணை எண்:400 தொடர்பாக அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்தபோது கூட அன்றைய தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.தேவராஜன் அவர்கள் காலத்தில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் இடையே விகிதாச்சாரத்தைப் பின்பற்றலாம் என்ற யோசனை கூட தெரிவிக்கப்பட்டது.ஆனால்,அது என்ன காரணத்தாலோ நடைபெறவில்லை.*


 *இந்நிலையில் 20 ஆண்டுகாலமாக இருந்த பதவி உயர்வு நடைமுறை திடீரென தற்போது விதித் திருத்தம் மூலம் மாற்றப்பட்டுள்ளது. நேரடியாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை.அது ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு என்பது இரண்டு பிரிவினருக்கும் பொதுவானதாக அல்லது சமமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் கருத்து.மேலும், இந்த விதித் திருத்தத்தின் மூலம் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்து பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்களின் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாய்ப்பும்  குறைகிறது. காரணம், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் அவர்கள் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற தேதியே கணக்கில் கொள்ளப்படும். இது அவர்களது முன்னுரிமையைப் பாதிக்கும்.*

 *வெளியிடப்பட்டுள்ள அரசாணை:243ன் மூலம் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு என்பது ஒரு ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 20% பேருக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, மற்றவர்கள் இறுதிவரை இடைநிலை ஆசிரியராகவே இருந்து ஓய்வு பெற வேண்டியதை தவிர வேறு வழியில்லை. தமிழ்நாடு அரசின் மற்ற துறைகளில் பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியுடன் இளநிலை உதவியாளராகப் பணியில் சேரும் ஒருவர் சுமார் 30 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறும்போது பல பதவி உயர்வுகளைப் பெற்று எத்தகைய பணிநிலையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில்கூட, தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாது என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. நேரடியாகப் பட்டதாரி ஆசிரியரை நியமனம் செய்வோமேயொழிய தகுதியான இடைநிலை ஆசிரியருக்குப் பதவி உயர்வு தரமாட்டோம் என்பது எவ்விதத்திலும் நியாயமானதாக இல்லை.*


*இந்த அரசாணை:243 தொடக்கக்கல்வித் துறையின்கீழ் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பையும் பறிக்கிறது.உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாகப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதை இது தடுக்கிறது. மேலும்,கூட்டு மேலாண்மையின் கீழ் செயல்படும் ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறுவதையும் இது தடுக்கிறது. எனவே,அரசு உதவி பெறும் பள்ளிகளின்  ஆசிரியர்களையும் பாதிக்கக்கூடிய அரசாணையாக இது உள்ளது.அரசு மேற்கொண்டுள்ள இந்த விதித்திருத்தம் தொடர்பான அரசாணையில் உயர் நீதிமன்ற உத்தரவு குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் "The Government shall also consider to change its policy and shall bring the elementary education to state level seniority. Atleast the government shall consider to bring district as a unit.If this restructuring is effected,several issues for pertaining to the elementary education department would be solved"எனக் குறிப்பிட்டுள்ளது.மேற்கண்ட நீதிமன்ற உத்தரவில் மாநில முன்னுரிமை கொண்டுவர பரிசீலிக்கலாம் என்றும், குறைந்தபட்சம் மாவட்ட முன்னுரிமை கொண்டு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது."Consider" என்று நீதிமன்றங்கள் அளிக்கும் உத்தரவுகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத பள்ளிக்கல்வித்துறை ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் அரசாணையை வெளியிடுவதில் இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? இத்தனை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நீதிமன்ற உத்தரவின் மீது சட்டப்படி பள்ளிக்கல்வித்துறை ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? நீதிமன்ற உத்தரவுகள் சாதகமாக இல்லை என்றால் தொடக்கக் கல்வித் துறையின் பதவி உயர்வு பிரச்சனையில் தனது அதிகாரத்தின் மூலம் சட்டப் பாதுகாப்புத்தர தமிழ்நாடு அரசு ஏன் நடவடிக்கை மேற்கொண்டிருக்கக் கூடாது? என்ற கேள்விகள் பரவலாக எழுகின்றன.*


*மேலும், மேற்கண்ட நீதிமன்ற உத்தரவின்படி அரசாணை எண்:15, நாள்:22.09.2023ன்படி மாநில/மாவட்ட முன்னுரிமை தொடர்பாகப் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் குழுவின் நிலை என்ன? அக்குழு யார் யாரிடம் கருத்து கேட்டது? அக்குழுவிற்கு அளிக்கப்பட்ட மூன்றுமாத கால அவகாசம் என்ன ஆனது?அக்குழு பற்றி அரசாணை: 243ல் எவ்விதக் குறிப்பும் இல்லாததன் காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்பிரச்சனை தொடர்பாகப் பல ஆண்டுகாலமாக நீதிமன்ற வழக்குகள் நடைபெற்று வந்துள்ளன.கடந்த 2019ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்த வழக்கு எண்:WMP(MD)NO: 15578/19 in WP(MD) NO:25455/18ல் வழங்கப்பட்ட தீர்ப்பானையில்கூட ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியல் என்பதே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.*


*கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை எண்:12 பள்ளிக்கல்வி (EE1(1)துறை, நாள்:30.01.2020ல்தான், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணித் தொகுதியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் புதிதாகச் சேர்க்கப்பட்டு ஒருங்கிணைந்த முன்னுரிமைப்பட்டியல்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி விதித்திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.* 

*இந்நிலையில், தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் இந்த அரசின் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அரசாணை:243ஐ நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெளியிட என்ன காரணம்?ஆளும் கட்சிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக இது அமையாதா? சுமார் 5000 ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதற்காக ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பறிப்பது நியாயமா? ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வைப் பாதிக்கும் அரசாணையை வெளியிடும்போது ஆசிரியர் சங்கங்களின் கருத்தையாவது தெரிந்திருக்க வேண்டாமா? என்ற கேள்விகள் பலமாக எழுகின்றன.*


*இந்த அரசாணையை வெளியிட்டதற்காக முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் சிலர் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற அரசாணையால் எத்தனை பேருக்கு என்ன பாதிப்பு என்பது போன்ற விவரங்களை எல்லாம் முதலமைச்சரோ, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ தெரிந்து வைத்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அரசாணையை வெளியிட்ட அதிகாரிகளே இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.*


*எது எப்படியோ தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை வெந்தணலைக் கிளறி விட்டது போல,தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களின் அதிருப்தியை அரசாணை:243ன் மூலம் கிளறிவிட்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இதை சம்பந்தப்பட்ட உளவுப் பிரிவுகள் மூலம் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் அறிய வேண்டும் என நாம் விரும்புகிறோம். எனவே,இனிமேல் தமிழ்நாடு அரசிடம் நாம் எதிர்பார்ப்பது என்பது அரசாணை: 243ஐ உடனடியாக ரத்து செய்வது என்பதுதான். அவ்வாறு ரத்து செய்யாவிட்டால் ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை ஒரு அரசாணையின் மூலம் பறித்ததாகப் பழிச்சொல் உருவாகும்.*


*தொடக்கக்கல்வித் துறையில் 98 சதவீத ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இந்த அரசாணையைக் கடுமையாக எதிர்க்கின்றன. வலிமையான ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் இப்பிரச்சனை தொடர்பாக 04.01.2024 அன்று திருச்சியில் கூடுகிறது. கடுமையான களப்போராட்டங்களைத் திட்டமிட வேண்டிய  சூழலை இந்த அரசாணை உருவாக்கியுள்ளது.*


*எனவ,மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு அரசாணை:243ஐ ரத்து செய்திட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்பார்க்கிறது.* 


*தொடக்கக் கல்வித்துறையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்றிய முன்னுரிமையே பல பிரச்சினைகளுக்குக் காரணம் என  நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கல்வித்தரம் சிறப்பாக விளங்குவதற்கு ஒன்றிய முன்னுரிமையே காரணமாகும். மேலும்,மாநில முன்னுரிமை கொண்டு வந்த பிறகு இதைக் காட்டிலும் கூடுதலான பிரச்சனைகள் உருவாகும் என்பது உறுதி.மேலும், மாநில முன்னுரிமை என்பது பெரும்பாலான பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கையாகும். நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி பெண்ணாசிரியர்களுக்கும் கூட இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு நாம் கொண்டு வருகிறோம்.எனவே, தொடக்கக் கல்வித்துறையில்  ஒன்றிய முன்னுரிமையே நீடிக்க வேண்டும், அரசாணை:243ஐ விரைந்து ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.

இப்படிக்கு

ச.மயில்

 பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி