அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லாது தேசிய அளவில் உருவெடுத்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2024

அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லாது தேசிய அளவில் உருவெடுத்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

 

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்புகளுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் அடிப்படையில், பிரிவு அதிகாரி பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பின்னர், உதவி பதிவாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு பட்டியலில் தங்களை சேர்க்காததை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அதிகாரிகளான செண்பகம், ராஜேஷ், பத்மபிரியா ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர்.


அதேபோல வழக்கமான முறைப்படி பட்டம் பெற்ற சீனிவாசன், இளங்கோவன், சுந்தரராஜன் உள்ளிட்ட 26 பேர் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.வி.சஜீவ் குமார் ஆகியோர் ஆஜராகினர்.


வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பதிவாளர் பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேசமயம், ஏற்கனவே பிரிவு அதிகாரிகளாக வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை, அரசு, பொதுத்துறை, பல்கலைக்கழக வேலைவாய்ப்புகளுக்கு செல்லாது என்று அறிவிப்பதால் ஏற்படும் பிரச்னை என்பது தேசிய அளவில் உருவெடுத்துள்ளது.


லட்சக்கணக்கானோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். இதற்கு சரியான சட்டரீதியான தீர்வு காணப்பட வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானிய குழு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

1 comment:

  1. 10 வருடத்திற்கு முன் Open University இல் படித்தவர்களுக்கு இந்த பிரச்சனை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி