தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2024

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி

 

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், நீட், ஐஐடி, போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் மத்திய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.


மத்திய அரசின் போட்டித்தேர்வுகள் முழுவதும் என்சிஇஆர்டி எனும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.


மற்ற மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் நலனை கருதி, மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற பயிற்று மொழியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அடைய முடியும்” என்று மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு இதே மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


அதே கோரிக்கையை வேறு விதமாகக் கூறி புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கை மனுதாரர் மறைத்துள்ளதாகக் கூறி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி