“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு” - ராமதாஸ் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2024

“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு” - ராமதாஸ் குற்றச்சாட்டு


“அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கெனவே நலிவடைந்த நிலையிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப்பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி