இந்தியாவில் 80% கணித ஆசிரியா்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை: ஆய்வில் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2024

இந்தியாவில் 80% கணித ஆசிரியா்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை: ஆய்வில் தகவல்

விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தா்க்கரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 80 சதவீத கணித ஆசிரியா்கள் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 152 பள்ளிகளைச் சோ்ந்த 1,300-க்கும் மேற்பட்ட கணித ஆசிரியா்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிா்ச்சி தகவல் வெளியானது.


ஆரம்ப மற்றும் நடுநிலைநிலைப் பள்ளிகளில் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களின் பாட அறிவை அறிந்துகொள்ளும் வகையிலான ஆய்வு ஒன்றை கல்விக்கான முன்னெடுப்புகள் (இஐ) என்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தியது.


அந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு கணிதப் பாடம் சாா்ந்த முதல்நிலை மதிப்பீட்டு பயிற்சித் தோ்வு நடத்தப்பட்டது. அவா்கள் பணிபுரியும் பள்ளிகளின் முதல்வா்களுக்கும் இந்த அறிக்கை பகிரப்பட்டது. இதுதொடா்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:


அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் திறனை மேம்படுத்த உதவும் விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தா்க்கரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்குப் பதிலளிக்க 80 சதவீத கணித ஆசிரியா்கள் தடுமாறினா்.


7-ஆம் வகுப்பு பாடங்களில் தடுமாற்றம்: நான்காம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியா்கள் சரியாக பதிலளித்தனா். ஆனால் 7-ஆம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியா்கள் மட்டுமே சரியாக விடையளித்தனா்.


பயிற்சித் தோ்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் 50 சதவீத கேள்விகளுக்கு 75 சதவீத ஆசிரியா்கள் சரியாக பதிலளித்தனா். 25 சதவீத கேள்விகளுக்கு எவ்வித தவறுகளும் இல்லாமல் 25 சதவீத ஆசிரியா்கள் மட்டுமே பதிலளித்தனா்.


அதேபோல் வடிவியல் பாடம் சாா்ந்த அடிப்படை கேள்விகளுக்கும் தவறான புரிதலோடு ஆசிரியா்கள் பதிலளித்தனா். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளையும் ஆசிரியா்கள் செய்தனா் என தெரிவிக்கப்பட்டது.


என்ன செய்ய வேண்டும்?


இந்த ஆய்வு குறித்த நிறுவனத்தின் துணை நிறுவனா் ஸ்ரீதா் ராஜகோபாலன் கூறியதாவது:


பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தோ்வெழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இதை நிறுத்திவிட்டு புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையில் நமது கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான விழிப்புணா்வாக நாம் இந்த ஆய்வை எடுத்துக்கொள்ள வேண்டும்.


நவீன கால பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் மாணவா்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

1 comment:

  1. கணிதம் மட்டுமல்ல. அனைத்திலுமே அதே சூழல்தான். கல்வியில் அடிப்படை புரியாமலேயே வளர்ந்து வரும் மாணவர்கள் பிற்காலத்தில் கற்பிக்கும் இடத்திற்கு வரும்போது எப்படி அவர்களால் அடிப்படைகளைத் தெளிவாக புரியும் படி சொல்லித் தர இயலும். ஆசிரியர்கள் மாணவர்கள் என்பதைத் தாண்டி இதை கட்டமைக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆழமான முறையில் யோசித்து வகுப்பறைச் சூழலையும் கல்வியில் கற்றல் நிலையையும் எடுத்துச் செல்லும் பட்சத்தில் இந்தக் குறைகள் ஏற்படாமல் இருக்கும். என் பணி நேரம் போக மற்ற நேரங்களில் கற்றலில் அடிப்படை புரியாமல் இருக்கும் மாணவர்களைச் சந்தித்து அதை சரி செய்வதற்கான பணியைச் செய்து வருகிறேன். எட்டு வருடங்களாக கணிதம் கற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்த மாணவிக்கு ஒரு மாதத்தில் கணிதத்தைப் புரிய வைத்தது அந்த மாணவியைப் புரிதலோடு அந்தப் பாடத்தை தேர்ச்சிப் பெற செய்தவர் தமிழ்த் துறையைச் சார்ந்த ஒரு பேராசிரியர்.மேலும் அந்த மாணவிக்கு கணிதத்தைப் புரிய வைத்தவர் கல்லூரியில் கணிதத் துறையில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி. கணிதத்தைக் கையாள்வதில் அந்த மாணவிப் படித்தப் பள்ளித் தோற்றுப் போனது. சிக்கலைச் சரியாகப் புரிந்து கொள்ள பள்ளிக் கோ பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கோ உள்ள இடைவெளிகளே இதற்கு காரணமாகின்றன. இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் தற்போதைக்கு இந்தக் கருத்துகளை மட்டும் பதிவிடுகிறேன். நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி