ஆசிரியர் இடமாற்றம்! அவர் சென்ற பள்ளிக்கே மாறிச் சென்ற 133 மாணவர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2024

ஆசிரியர் இடமாற்றம்! அவர் சென்ற பள்ளிக்கே மாறிச் சென்ற 133 மாணவர்கள்!

பொதுவாக மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், மாணவர்கள் வருத்தமடைவதும், சில நாள்களில் அது சரியாவதும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக ஆசிரியர் சென்ற பள்ளிக்கே ஒட்டுமொத்த மாணவர்களும் சென்று சேருவது இதுவே முதல்முறையாக கேள்விபடுகின்றோம். ஆம், தெலங்கானாவில் அப்படியொரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது.


தெலங்கானாவின், மஞ்சேரி மாவட்டத்தில், பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீனிவாசன்(53). இவர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுத்துவந்தார். ஸ்ரீனிவாசன் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமன்று, பெற்றோராகவும், பாதுகாவலராகவும், நல்ல வழிகாட்டியாகவும், மனம் கவர்ந்த ஆசிரியராகவும் இருந்துள்ளார். அரசுப் பள்ளி என்றபோதும் தன் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டவராக இருந்துவந்தார்.


பள்ளியில் மாணவர்களின் மீது அக்கறையாகவும், அன்பாகவும் இருந்துவந்துள்ளார். அவரது வகுப்பில் மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லையென்றாலும், பெற்றோர்களை அழைத்து விசாரிப்பாராம். மாணவர் சோர்வாக இருந்தால் உடனே அதற்குண்டான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய முயற்சிப்பாராம். இவ்வாறு பலவிதங்களிலும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே நல்ல பரஸ்பர உறவில் இருந்துவந்துள்ளார் ஸ்ரீனிவாசன்.


இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். தற்போது வேலைசெய்யும் பள்ளியிலிருந்து சுமார் மூன்று கி.மீட்டர் தொலைவில் அவர் மாறுதலான பள்ளி உள்ளது. ஆனால் ஆசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு வேறு பள்ளிக்குச் செல்ல விருப்பமே இல்லை. இருப்பினும், அரசு உத்தரவை மீற முடியாத நிலை.


படிப்பில் மட்டுமின்றி தனக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டது மாணவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பல மாணவர்கள் வேறு பள்ளிக்குப் போகவேண்டாம் சார் என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளனர். இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் மன்றாடியுள்ளனர், போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் பலன் இல்லை.


ஆசிரியரின் இடமாற்றத்தைத் தடுக்க இயலாது என்பதை ஒருகட்டத்தில் மாணவர்கள் புரிந்துகொண்டனர். இதையடுத்து தனக்கு பிடித்தமான ஆசிரியர் சென்ற பள்ளிக்கே தாங்களும் சென்று படிக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். ஒன்று, இரண்டு மாணவர்கள் அல்ல ஒட்டுமொத்தமாக சுமார் 133 மாணவர்கள் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் சென்ற பள்ளிக்கே போய் சேர்ந்தனர்.


இந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடை செய்துள்ளது. பள்ளியில் உள்ள 250 மாணவர்களில் பாதி மாணவர்கள் அதாவது 133 மாணவர்கள் ஆசிரியர் சென்ற பள்ளிக்கே சென்று சேர்ந்திருப்பது இதுவே முதல் முறை என்றும், இதுபோன்ற சம்பவம் எங்கும் கேள்விப்பட்டதே இல்லையென்றும், இது வியப்பை ஏற்படுத்தியதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி யாதையா தெரிவித்தார்.


இதுதொடர்பாக ஆசியர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,


பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுவதாகவும், ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு என் திறமைக்கு ஏற்ப அவர்களுக்குக் கற்பித்தேனே தவிர வேறேதும் நான் செய்யவில்லை என்று தன்னடக்கத்துடன் பேசியுள்ளார். அதை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். என்னை அதிகம் நேசிக்கத் தொடங்கினர் என்று அவர் கூறினார். மேலும், அரசுப் பள்ளிகளும் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி