224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2024

224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள்

 தமிழகத்தில் 224 தனியார் பொறியில் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.


இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், நிர்வாகி எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:


தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) அக்கல்லூரிகளில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 175 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் என்ற பகுதியில் ஒவ்வொரு கல்லூரியிலும் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைக் காணலாம்.


13 கல்லூரிகள்: ஒரு பேராசிரியர் 13 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் உண்மையில் பணியாற்றுகிறாரா அல்லது ஆய்வு நேரத்தில் வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர் கொண்டுவரப்பட்டுள்ளாரா என்பதை ஊதிய விவரம், இபிஎப் தகவல், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அடையாள எண் ஆகியவற்றைக் கொண்டு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.


இந்த முறைகேடு தொடர்பான விவரங்களை அனைத்து ஆதாரங்களுடன் மத்திய கல்வி அமைச்சர், ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக ஆளுநர், முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நினைத்தால் இந்த முறைகேட்டை ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.


கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராகப் பணியாற்ற முடியாது. கவுரவப் பேராசிரியராக இருந்தால்கூட 2 கல்லூரிகளில் மட்டுமே பணிபுரிய முடியும்.


எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த 353 பேராசிரியர்களையும் விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

  1. Above 70%of the B. Ed colleges received staff approval like this in Tamilnadu, so please publish and take action sir

    ReplyDelete
  2. I would like to inform you that maximum BEd colleges in Tamilnadu getting staff approval like this method so kindly take action

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி