அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்ற கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவுக்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த 22-ம் தேதி முதல் கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியுள்ளன. அதன்படி மாறுவேடம், பல குரல் பேச்சு, பாடல், நடனம், ஓவியம், கதை சொல்லல் உட்பட பல்வேறு போட்டிகளில் மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் போட்டிகளில் மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பங்கேற்கின்றனர்.
தற்போது பள்ளி அளவில் நடத்தப்படும் போட்டிகள் அடுத்தகட்டமாக வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களையும் அதாவது 100 சதவீதம் அளவுக்கு போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். அதற்கான பதிவுகளை எமிஸ் தளத்தில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “கலைப் போட்டிகளை நடத்துவதன் மூலம் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வின்போது இந்த போட்டிகளை நடத்துவதால் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் கவனம் சிதறக்கூடும். இது தவிர, போட்டிகளுக்காக குறைந்தபட்சம் 10 முதல் 15 நாள்கள் வரை பயிற்சி தர வேண்டும்.
இத்தகைய சூழலில் தேர்வுகளுக்கான பாடங்களை எவ்வாறு நடத்த முடியும், மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காக கலைத் திருவிழா வேண்டாம் எனக்கூறவில்லை. தேர்வுக் காலங்களில் முடிந்த வரை போட்டிகள் நடத்தப்படாதவாறு அதற்கான கால அட்டவணையை வடிவமைக்க வேண்டும்.
அதேபோல், போட்டிகளில் சுய விருப்பத்தில் பங்கேற்கும் மாணவர்களை ஊக்குவிக்கலாம். அதைவிடுத்து அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ள கட்டாயப் படுத்துவது சரியாக இருக்காது. அதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, கலை திருவிழாவில் மாணவர்களின் 100 சதவீத பங்களிப்பை உறுதிசெய்து அதை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஆசிரியர்கள் கூறினர்.
முதலில் பகுதி நேர ஆசிரியர்களான இசை ஆசிரியர்களை மு. க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் பணி நிரந்தரம் செய்து அரசு ஆணையை வெளியிட வேண்டும்.
ReplyDelete