கர்நாடகாவில் அங்கன்வாடியில் குழந்தைகளின் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும்அதன் ஊழியர்கள் திரும்பவும் வாங்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம், குண்டூரில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இங்கு பயிலும்குழந்தைகளுக்கு முட்டையுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனை அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோர் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட முயன்றனர். அப்போது லட்சுமியும், ஷைனஜா பேகமும் குழந்தைகளின் தட்டில் வைக்கப்பட்ட முட்டைகளை மீண்டும் வேகமாய் திரும்ப எடுத்துக்கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது: தவறு செய்த அங்கன்வாடி ஊழியர்கள் லட்சுமி, ஷைனஜா பேகம் இருவரையும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு அவர்களை சென்றடைகிறதா என்பதை கண்டறிவதற்காகவே புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற நடைமுறைகளை அமல்படுத்தினோம். இப்போது அதன் மூலமாகவே இத்தகைய செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அங்கன்வாடி மையங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கர்நாடகாவில் 69,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இதில் ஒரு குழந்தையின் உணவுக்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ரூ.8 வழங்குகிறது. விலைவாசி உயர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் 8 ரூபாய்க்கு சத்தான உணவை வழங்க முடியுமா என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டியுள்ளது.
9 ஆண்டுகளாக இந்தத் தொகைஉயர்த்தப்படவில்லை. எனவே மத்திய அரசும் மாநில அரசும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த தொகையை உடனடியாக உயர்த்த வேண்டும்.கர்நாடக அரசு குழந்தைகளுக்குதினமும் முட்டை, பால் வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. கதவு, நாற்காலி, வகுப்பறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.
நான் பார்த்த வகையில் பெரும்பாலான சத்துணவு ஊழியர்கள் திருடர்களே.... சிலரை தவிர......
ReplyDeleteஉண்மை
Delete