ஆசிரியரை அவமானப்படுத்திய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
Video 👇👇👇
சென்னை அசோக் நகர் , சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளையின் மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தக்கூடாது என்று தட்டிக்கேட்ட பார்வை திறனற்ற ஆசிரியர் சங்கரிடம் மகா விஷ்ணு கைநீட்டி திமிராக பேசியதற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 6) காலை சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார்
பள்ளியில் நடந்த மேடை நிகழ்ச்சியில் பேசிவிட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தவறுக்கு யார் காரணமாக இருந்தாலும் சரி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 முதல் 4 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தவறுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு காரணமா, தலைமை ஆசிரியர் காரணமா அல்லது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு இது நடந்ததா என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தகவல் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அசோக் நகர் பள்ளி பல சாதனைகள் மற்றும் வரலாற்றை படைத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது வேதனையளிக்கிறது. இது கண்டனத்துக்குரியதுதான்.
ஒரு சுற்றறிக்கை அல்லது வாய்மொழி அறிவுரைகள் வழங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு சிஇஓ மீட்டிங்கிலும் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஆன்மீக சொற்பொழிவு அரசு பள்ளியில் நடந்ததை தட்டிக் கேட்ட ஆசிரியர் சங்கர் குறித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ் ஆசிரியர் சங்கர், ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். கண் பார்வை இல்லை என்றாலும், எப்படி கேள்வி கேட்டார் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்தது குறித்து ஆசிரியரிடம் நானும் கேட்டிருக்கிறேன்.
இந்த விவகாரம் குறித்து புகார் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவருடைய விருப்பம். ஆனால் காணொளி மூலம் பார்த்ததை வைத்துக்கொண்டு மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
என் ஏரியாவில் வந்து இவர் பேசிவிட்டு போயிருக்கிறார். என் ஆசிரியரை அவமானப்படுத்திவிட்டு போயிருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரமாக சும்மாவிடமாட்டேன். மிகப்பெரிய விசாரணை நடத்தப்படும் ” என்று கூறினார்.
தலைமை ஆசிரியரிடம் கேட்டாலே யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரிந்துவிடுமே என செய்தியாளர்கள் கேட்க, இதற்கு அன்பில் மகேஷ், “உங்கள் முன் விசாரணை நடத்தமுடியாது. ஏற்கனவே இயக்குநர் தலைமையில் விசாரணை நடக்கிறது” என்றார்.
மகாவிஷ்ணுவுடன் நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களே என்ற கேள்விக்கு, “விசிட்டர்ஸ் என்ற வகையில் என்னை ஒரு நாளுக்கு 100 பேர் பார்க்கிறார்கள். போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டதால் அனுமதி கொடுக்கிறோம் என்பதெல்லாம் தவறான ஒரு செய்தி. திமுக ஆட்சியில் கொள்கையில் சமரசம் கிடையாது ” என்று குறிப்பிட்டார்.
மகா விஷ்ணு மீது காவல் துறையில் புகார்
’மறப்போம் மன்னிப்போம்’ என்று ஆசிரியர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆனாலும் எங்கள் சார்பில், பள்ளியில் மூட நம்பிக்கை கருத்துகளைப் பேசிய மகா விஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும்.
அரசுப் பள்ளிகளை யார் குறை கூறினாலும் அதை ஏற்க முடியாது. துறை அமைச்சராக அதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது
பள்ளிகள்தான் பகுத்தறிவை விதைக்கும் இடம். பிற்போக்கு சிந்தனையை கேள்வி கேட்டது தமிழ்தான். பிற்போக்கான சிந்தனைகளை விதைப்பதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. யார் எதை சொன்னாலும் அதை மாணவர்கள் பகுத்தறிந்து செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவு தொடர்பாக அனைத்து ஆசிரியர்களையும் வரவழைத்து விசாரிக்க இருக்கிறோம். சர்ச்சைக்குரிய சொற்பொழிவு குறித்து எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வுதான், முதல்வருக்கும் எனக்கும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி