பழைய பென்சன் திட்டமே என்றென்றும் மேலானது - ஆர்.இளங்கோவன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2024

பழைய பென்சன் திட்டமே என்றென்றும் மேலானது - ஆர்.இளங்கோவன்

அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்றுபடுவோம்; விடாப்பிடியாக போராடுவோம்; வென்றெடுப்போம்!


யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பற்றிய தகவல்களை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொஞ்சம் கொஞ்சமாக கசிய விட்டு  வருகிறது.முழு அறிவிக்கை  வெளி வரும்போதுதான் முழுப் பிரச்சனையும் அம்பலத்துக்கு வரும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 1.4.2025 முதல் அமலாகும்.அதாவது 31-3-2025ல் ஓய்வு பெறுபவர்களுக்கு பொருந்தும்.  


புதிய பென்சன் திட்டத்தின் நடைமுறை


என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் - அதாவது புதிய பென்சன் திட்டத்தில் 10 சதம் தொகை நாம் கட்டுகிறோம்; அரசு 14 சதம் போடுகிறது. அது மொத்தமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வரும் லாபமும் சேர்த்து நமது பென்சன் கணக்கில் இருக்கும். இதில் ஓய்வு பெறும்போது 60 சதம் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம்.40 சதம் ஆனுவிட்டி என்ற பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து நாம் பென்சன் பெற வேண்டும்.பென்சனரும் அவரது இணையரும் இறந்த பிறகு,  போட்ட 40 சதம் முதலீடு  நாமினிக்கு திருப்பி கிடைத்துவிடும்.


ஒருங்கிணைந்த திட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) ஊழியர்கள் 10 சதம் போடுவது தொடரும்; அரசு 14 சதத்துக்குப்பதில் 18.5 சதம் போடும்.மொத்தம் 28.5 சதம் பென்சன் கணக்கில் வர வேண்டும் அல்லவா? ஆனால் பென்சன் கணக்கில், ஊழி யரின் 10 சதத்தோடு அரசு 10 சதம்தான் சேர்க்கும். ஆக  மொத்தம் ஊழியர் கணக்கில் 28.5 சதத்துக்கு பதில் 20 சதம்தான் இருக்கும்.அதனை சந்தையில் எப்போதும் போல முதலீடு செய்து லாபம் வந்தால் அதையும் சேர்த்து வரும் தொகைக்கு தனி நபர் பென்சன் கணக்கு என்று பெயர். மீதி 8.5  சதம் அரசின் கணக்கில் சேரும்.அவர்கள் அதனை தனியாக நிர்வகித்து பென்சனில் குறைவதை ஈடுகட்ட பயன்படுத்துவார்களாம். தனி நபர்பென்சன் கணக்கில் உள்ள பணம் முழுக்க அவர்கள் எடுத்துக்கொண்டு, ஊழியருக்கு உத்தரவாதமான பென்சன்,  அவருக்குப் பிறகு இணையருக்கு உத்தரவாதமான குடும்ப பென்சன் தருவார்களாம். இருவரும் இறந்த பிறகு அவர்கள் போட்ட பணம் நாமினிக்கு புதிய பென்சன் திட்டத்தில் 40 சதம் திரும்பக் கிடைப்பது போல கிடைக்காதாம். அரசே வைத்துக்கொள்ளுமாம்.


பணிக்கால வேறுபாடு


புதிய பென்சன் திட்டத்தில் 25 ஆண்டு பணிக்காலம் ஊழியருக்கு இருக்கவேண்டும். தனி நபர் பென்சன் கணக்கில் உள்ள பணம் முழுக்க 100 சதமும் அரசு எடுத்துக் கொள்ள ஊழியர் ஒப்புகொள்ளவேண்டும். அப்படி என்றால் ஊழியருக்கு அவரது கடைசி 12 மாத அடிப்படைச் சம்பளத்தைக் கூட்டி 12 ஆல் வகுத்து வரும் சராசரி ஒரு மாத அடிப்படைச் சம்பளத்தில் 50 சதம் உத்தரவாதமான பென்சன் கிடைக்கும். ஆனால் ஒருங்கிணைந்த ஓபிஎஸ்சில் 10 வருட பணிக்காலத்துக்கே கடைசி மாத அடிப் படை சம்பளத்தில் 50 சதம் பென்சன் உத்தரவாதமாக கிடைக்கும்.  புதிய பென்சன் திட்டத்தில் (என்பிஎஸ்)சில் 24 சதத்தில் 60 சதம் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? ஆனால் யுபிஎஸ்சில் தனி நபர் பென்சன் கணக்கில் உள்ள  20 சதத்தில்தான்  60 சதம் வரை எடுத்துக்கொள்ளலாம்.அப்படி எடுத்துக்கொண்டால் உங்கள் 50 சத பென்சன் அதே விகிதாச்சாரத்தில் குறைக்கப்படும். உதாரணமாக 60 சதம் எடுத்துக்கொண்டால் 50 சதத்தில் 60 சதம் குறைக்கப்படும்.மீதி 40 சதம் தான் பென்சனாக கிடைக்கும். ஆனால் இது உத்தரவாதமாக கிடைக்கும்.என்பிஸ்சில் போதுமான பென்சனும் இல்லை. உத்தரவாதமான பென்சனும் இல்லை. அதே போல 25 ஆண்டு பணிக்காலம் இருந்தால்தான் 50 சதம் பென்சன் கிடைக்கும்.20 ஆண்டுதான் பணிக்காலம் என்றால் உங்கள் பென்சன் 25க்கு 50 என்றால் 20க்கு  எவ்வளவு என்று பார்ப்பார்கள்.அப்படி என்றால் உங்க ளுக்கு ஒரு மாத சராசரி சம்பளத்தில் 40 சதம் பென்சன் தான் கிடைக்கும்.10 ஆண்டுதான் உங்கள் பணிக்காலம் என்றால் 20 சதம் பென்சன்தான் கிடைக்கும்..ஆனால் ஓய்வு வயதில் (60/62/65) ஓய்வு பெறும் ஒருவருக்கு குறைந்த பட்ச பென்சனாக ரூ 10,000 உத்தரவாதமாக கிடைக்கும். ஓபிஎஸ்சில் இது ரூ 9000. ஆந்திராவில் உள்ள ஜிபிஎஸ் என்ற கேரன்டீட் பென்சன் திட்டத்தில் 10 ஆண்டு பணி முடித்திருந்தாலே கடைசி  மாத சம்பளத்தில் 50 சதம் பென்சன் கிடைக்கும். அத்துடன் ஊழியர் கணக்கில் உள்ள தொகையில் 60 சதமும் எடுத்துக் கொள்ளலாம். பென்சன் விகிதாச்சாரப்படி குறையாது*


யுபிஎஸ் திட்டத்தில் குறைந்தபட்ச பென்சன்


ஒருவரின் கடைசி 12 மாத சராசரியின் அடிப்படையில் ஒரு மாத சம்பளம் 1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். அவர் தன் தனி நபர் பென்சன் கணக்கில் உள்ள 100 சத பணத்தையும் அரசுக்கு விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார் என்று கொள்வோம். அவருக்கு  60 வயதில் ஓய்வு  பெறும்போது 25 வருட பணிக்காலம் இருக்கிறது என்றால் அவருக்கு 50 சதம் பென்சன் ரூ.50,000 கிடைக்கும். அவர்  60 சதம் தனி நபர் பென்சன் கணக்கில் இருந்து தான்  எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார் என்றால், அவரது பென்சன் 50,000 த்தில் 60 சதம் குறைந்து மீதி 40 சதம் தான் பென்சன் கிடைக்கும்.அதாவது ரூ.20,000 தான் கிடைக்கும்.ஆனால் இது உத்தரவாதமாக கிடைக்கும்.  இந்த தொகை 10,000க்கு குறைந்தால் ரூ.10,000 உத்தர வாதமாக கிடைக்கும். 25 ஆண்டு பணிக்காலம் இருந்தால் முழு தனி நபர்  கணக்கில் உள்ள பென்சன் தொகையும் விட்டு கொடுத்தால் ரூ.50,000 பென்சன்; 60 சதம் எடுத்துக்கொண்டால் ரூ.20,000 பென்சன்; 20 ஆண்டு பணிக்காலம் தான்  இருந்தால்: சராசரி ஒரு மாத சம்பளத்தில் முழு தனி  நபர் கணக்கில் உள்ள பென்சன் தொகையும் விட்டுக் கொடுத்தால் 40 சதம் பென்சன். அதாவது ரூ.40,000 பென்சன்; 60 சதம் எடுத்துகொண்டால் ரூ.40,000 த்தில் 40 சதம் அதாவது ரூ.16,000 பென்சன் உத்தரவாதம். 10 ஆண்டு பணிக்காலம் தான் இருந்தால் முழு தனி நபர் கணக்கில் உள்ள பணத்தையும்   விட்டுக் கொடுத்தால் சராசரி ஒரு மாத சம்பளத்தில் 20 சதம் அதாவது ரூ. 20,000 பென்சன். 60 சதம் எடுத்துக்கொண்டால்  20,000 த்தில் 40 சதம்  அதாவது ரூ. 8000 பென்சன். ஆனால் ரூ. 10,000 உத்தரவாதம். 10 ஆண்டுக்கு குறைந்தால் பென்சன் இல்லை. அவர்  பணம் திரும்பிக் கிடைக்குமா என்பது உத்தரவு வரும்போதுதான் தெரியும். ஆனால் நாம் வலியுறுத்தும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (ஓபிஎஸ் ) இந்த பிரச்சனை எதுவும் இல்லை. 10 ஆண்டு பணிக்காலம் இருந்தால் ரூ.50,000 பென்சன் உத்தரவாதமாக கிடைக்கும்.எந்தப் பங்களிப்பும் தேவை இல்லை. எனவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்(யுபிஎஸ்) என்பது உத்தரவாதமானது என்றாலும் என்பிஎஸ் போலவே, பழைய பென்சன் திட்டத்துடன் ஒப்பிடும்போது போதுமானது இல்லை.


ஒருங்கிணைந்த திட்டத்தில்  குடும்ப பென்சன்


குடும்ப பென்சன் இணையருக்கு மட்டும் உண்டு. புதிய பென்சன் திட்டத்தில் (என்பிஎஸ்) கூட அப்படித்தான்.ஓய்வுபெற்ற ஊழியரின் தகுதியான பென்சனில் 60 சதம்  குடும்ப பென்சன் உத்தரவாதமாக வழங்கப்படும். ரூ.50,000 பென்சன் என்றால் 60 சதம் ரூ. 30,000 குடும்ப  பென்சன் உத்தரவாதமாக கிடைக்கும். பென்சன் ரூ.10,000 என்றால் அதில் 60 சதம் ரூ.6000 தான் குடும்ப  பென்சனாக கிடைக்கும்.குறைந்தபட்ச பென்சன் ரூ. 10,000 என்பது ஓய்வு வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும்தான்  பொருந்தும். குடும்ப பென்சனுக்கு பொருந்தாது. எனவே குறைந்தபட்ச குடும்ப பென்சன் ரூ. 6000 தான். என்பிஎஸ்சில் போதுமான பென்சன் இல்லை என்று தான் பழைய பென்சன் திட்டம் (ஓபிஎஸ்) கேட்டோம். ஓபிஎஸ்சில் பென்சனர் இறந்து விட்டால் ஓய்வுபெற்ற தேதியில் இருந்து 7 ஆண்டுகளுக்கு அல்லது அவருக்கு எப்போது 67 வயது ஆகுமோ இரண்டில் எது முன்பு வரு கிறதோ அதுவரை குடும்ப பென்சன் கடைசி மாத சம்பளத்தில் 50 சதமானம் வழங்கப்படும். அதன்பின் கடைசி மாத சம்பளத்தில் 30 சதமானம் குடும்ப பென்சன் வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ.9000 அடிப்படை பென்சன் வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமாக அகவிலைப்படி கிடைக்கும்.1-4-25ல் 57 சதம் சேர்த்தால் ரூ.14,130 வரும்.இணையரும் இறந்துவிட்டால் அவரது ஊனமுற்ற மகன் அல்லது மணமாகாத ,விதவை அல்லது விவாகரத்தான மகள் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆயுள் வரை அல்லது மறுமணம் புரியும் வரை அதே பென்சன் கிடைக்கும்.ஆனால் என்பிஎஸ் அல்லது யுபிஎஸ்சில் இணையரோடு பென்சன் முடிந்து விடுகிறது.


அகவிலைப்படி


என்பிஎஸ்சில் அகவிலைப்படி இல்லை. யுபிஎஸ்சில் அகவிலைப்படி உண்டு. ஆனால் அகவிலைப்படி மத்திய  அரசு ஊழியர்களுக்கு 2016 ல் இருந்து கணக்கிடப்படுகிறது. இப்போது ஜூலை 2024ல் 53 சதம் அகவிலைப்படி உள்ளது. 1.1.2025ல் அதுவே 57சதம் ஆகும்.எனவே 1.4.2025ல் இந்த 57 சதத்தை பென்சனோடோ அல்லது குடும்ப பென்சனோடோ சேர்த்துக்கொடுப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது.1.4.2025ல் அகவிலைப்படியை புதிய அடிப்படை உருவாக்கி பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பார்கள் என்று தான் தோன்றுகிறது.இல்லை என்றால் குறைந்த பட்ச பென்சனை மத்திய அரசில் உள்ள  ரூ.9000த்தை விட கூடுதலாக ரூ.10,000 வைத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.  அப்படியானால் பென்சனோ, குறைந்தபட்ச பென்சனோ அல்லது குடும்ப பென்சனோ 1-4-2025ல் அமலாகும்போது அகவிலைப்படி இல்லாமல் வெறும் பென்சன் மட்டும்தான் கிடைக்கும். எனவே நாம் பார்த்த எடுத்துக்காட்டில் வரும் பென்ச னோடு 57 சதம் கூடுதலாக கிடைக்காது.குறைந்தபட்ச குடும்ப பென்சன் வெறும் ரூ6000 ம் தான் கிடைக்கும். எனவே தான் நாம் ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் (யுபிஎஸ்) போதுமான பென்சன் இல்லை என்கிறோம். பழைய பென்சன் திட்டம் (ஓபிஎஸ்) தான் சிறந்தது என்கிறோம்.


பணிக்கொடை


பணிக்கொடை ஓபிஎஸ் போலவே என்பிஎஸ் மற்றும் யுபிஎஸ்சிலும் பணிக்கொடை விதிகள் படி கிடைக்கும்.  5 ஆண்டுகள் பணி முடித்தாலே பணிக்கொடைஒவ்வொரு ஆண்டு பணிக்கும் அரைமாத அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சேர்த்து கணக்கிட்டு தரப்படும். அதிக பட்சம் 16.5 மாத சம்பளம் கிடைக்கும். இப்போது அதிகபட்சம் ரூ 25 லட்சம்.


லம்ப்சம் என்ற மொத்த தொகை


நீங்கள்ஓய்வு வயதை அடைந்து ஓய்வு பெறும்போது உங்கள் தனிநபர் கணக்கில் உள்ள 100 சத பென்சன் தொகையையும் விட்டுக்கொடுத்தால் மட்டுமே இந்தத்தொகை உங்களுக்கு கிடைக்கும். 6 மாத பணிக்காலத்துக்கு உங்கள் கடைசி மாத அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும்  தொகையில் 10ல் ஒரு பாகம் அதாவது 10 சதமானம் மொத்த தொகையாக தரப்படும். இது பணிக்கொடை இல்லை. ஓராண்டுக்கு 20 சதம் என்ற கணக்கில் 25 ஆண்டு பணி முடித்திருந்தால் 5 மாத சம்பளம் கிடைக்கும்.10 ஆண்டு முடித்திருந்தால் 2 மாத சம்பளம் கிடைக்கும்.இது மீனுக்கு தூண்டில் புழு போன்றது.


கம்யூட்டேசன்


பழைய பென்சன் திட்டத்தில் (ஓபிஎஸ்) பென்சனில் 40 சதமானத்தை 12 ஆண்டுகளுக்கு கணக்குப்போட்டு ஓய்வு  பெறும் முன்பே பெறும் கம்யூட்டேசன் உண்டு.15 ஆண்டுகள் கழித்து அந்த தொகை திருப்ப வந்துவிடும்.15 ஆண்டுகளும் முழு பென்சனுக்கும் அகவிலைப்படி உண்டு. இது என்பிஎஸ்சிலோ யுபிஎஸ்சிலோ கிடையாது.


கூடுதல் பென்சன்


பழைய திட்டத்தில் (ஓபிஎஸ்) 80 வயதுக்கு மேல் வாழ்ந்தால் கூடுதல் பென்சன் உண்டு. 80 முடிந்தால் 20% கூடும்; 85 முடிந்தால்  30% கூடும்; 90 முடிந்தால்  40% கூடும்.  95 முடிந்தால்   50% கூடும்; 100 முடிந்தால்   100%   கூடும்; கூடுதல் பென்சனுக்கும் அதே சதவீத அகவிலைப் படி உண்டு. இது என்பிஎஸ்சிலோ யுபிஎஸ்சிலோ கிடையாது.


ஊதியக்குழுவில் உயரும்


ஓபிஎஸ்சில் ஒவ்வொரு ஊதியக்குழு அமலாகும் போதும் ஓய்வூதியமும் குறைந்தபட்ச பென்சனும் உயரும். என்பிஎஸ் அல்லது யுபிஎஸ்சில் வரும் ஆனுவிட்டி அல்லது உத்தரவாத பென்சன் உயரும் என்ற உத்தரவாதம் இல்லை. யுபிஎஸ்சிலும் நமது பணம் சந்தையில் பலவிதமாக முதலீடு செய்யப்படும்.சந்தையில் அது என்ன வீழ்ச்சியை சந்தித்தாலும் ஒப்புக்கொண்ட பென்சன் உத்தரவாதமாக கிடைக்கும் என்பது இருந்தாலும் பென்சன் போதுமானது இல்லை என்பது உண்மை ஆகும். அத்துடன் பல போராட்டங்களுக்குப்பிறகு பெற்ற ஓபிஎஸ் பலன்கள் பெரும்பாலும் பறிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) ஒன்றுதான்  போதுமானது, கண்ணியமானது. அகவிலைப்படியுடன் முழுமையாக இணைக்கப்படுவது. உத்தரவாதமானது. குடும்ப பென்சன் உள்ளது.வாரிசுக்கும் உண்டு. குறைந்த பட்ச பென்சனும் நியாயமானது. கம்யூட்டேசன் உண்டு. வயதானால் உயரும். ஊதியக்குழுவில் உயரும். எனவே அதற்கான போராட்டம் தொடரவேண்டும். தமிழ்நாடும் கேரளமும் ஓபிஎஸ்-சை அமல்படுத்தி முன்னுதாரணமாக வரவேண்டும்.


முன்பே ஓய்வு பெற்றவர்கள்


1-1-2004க்கு பின்1-4-2025 க்கு முன் ஓய்வு பெற்ற வர்களுக்கு 10 ஆண்டு பணி முடித்து ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு யுபிஎஸ் பொருந்தும். அவர்கள் பெற்ற பென்சன் கணக்கில் இருந்த தொகையை அவர்களுக்கு வரும் நிலுவைத் தொகையில் பிடித்தம் செய்யப்படும் என்கிறது ஒன்றிய அரசு செலவுத்துறையின் செய்தி. அவர்களுக்கும் ஓபிஎஸ் அமுல் படுத்தப்படவேண்டும் என்பதுதான் நியாயம்.


பங்கு சந்தை


மத்திய மாநில அரசுகளில் 99 லட்சம் பேர் புதிய பென்சனில் உள்ளனர். அவர்களின் பணம் ரூ.10.5 லட்சம்  கோடி பங்குச் சந்தை விளையாட்டில் தொடர வேண்டும்; கார்ப்பரேட்டுகளும் பயன் பெற வேன்டும்; உத்தரவாதமான பென்சன் கொடுத்த மாதிரியும் இருக்கவேண்டும். அது தான் ஒன்றிய அரசின் ‘ஒருங்கிணைந்த பென்சன் திட்டம்’ நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப் கொடுப்பதைப்போல நம் பணம் 100 சதத்தை எடுத்து நமக்கே பென்சன் கொடுக்கிறார்களாம்! இதை ஏற்க முடியாது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள்  இணைந்து நாடு தழுவிய போராட்டம் வெடிக்க வேண்டும். பஞ்சாப், ஹரியானா ஊழியர்கள்  மாபெரும் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். போராடினால் வெல்ல முடியாதது இல்லை.இப்போது எப்படி யுபிஎஸ்சுக்கு இறங்கி வந்தார்களோ அதே போல ஓபிஎஸ்சுக்கும் இறங்கி வரும் நிலை ஏற்படும்.


கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தவர்கள்  நிதிப்பற்றாக்குறை என ஒப்பாரி வைக்கிறார்கள்


அரசாங்கத்தால் பழைய பென்சன் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்த முடியாது; ஏனெனில் நிதிப்பற்றக்குறை உள்ளது என்று சில புத்திசாலிகள் வாதிடுகிறார்கள். சரிதான். நிதி பற்றாக்குறை 3 சதத்தில் இருக்கவேண்டும் என்று நிர்ண்யித்துவிட்டு இப்போது 5.9 சதத்துக்கு உயர்த்தியது ஏன்?ஏப்படி?


கார்ப்பரேட்டுகள் மீதான வரியை 30 சதத்தில் இருந்து 22 சதமாகவும் புதிய கார்ப்பரேட்டுகளுக்கு 15 சதமும் குறைத்து ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் கோடியை இழந்தது ஏன்?   கார்ப்பரேட்டுகளின் கடனை ரூ.17 லட்சம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்துவிட்டு மக்கள் வரிப்பணத்தில் இருந்து அதை ஈடுகட்டி நிதிப்பற்றாக்குறையை அதிகரித்தது யார்?


கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி ஊக்கத்தொகை கொடுத்தது யார்? 500 கர்ப்பரேட்டுகளுக்கு புதிய ஊழியர்களை எடுக்க, அவர்கள் சம்பளத்தை ரூ5000 நாங்களே கொடுக்கிறோம் என்று ரூ.2 லட்சம் கோடியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியது யார்?


ரூ.5லட்சம் கோடி பொருளாதாரம் - தங்க பாரதம் - கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் தானா?தங்கள் காலத்தில் நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு இல்லையா?உழைக்கிறவர்களுக்கு இல்லையா?


ஏன் எந்த பென்சனும் இல்லாத 10 கோடி முதியவர்களுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கொடுக்கக்கூடாது? அதற்கு மொத்தமே ரூ. 3 லட்சம் கோடிதான் செலவாகும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 1.8 சதம்தான்.

ஈபிஎஸ் பென்சனர்களுக்கு ஏன் குறைந்த பட்ச பென்சன் ரூ 9000 கொடுக்கக்கூடாது?


அனைவரும் இணைந்து தெருவில் இறங்கி விடாப்பிடியாகப்போராடினால் வெற்றி நிச்சயம்.


 தீக்கதிர்

2.9.2024

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி