“இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்” - யுஜிசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2024

“இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்” - யுஜிசி

 

“மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும்” என யுசிஜி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.


பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் வியாழக்கிழமை (நவ.14) நடந்தது. இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கிவைத்தார். இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தொடக்கவிழா முடிவடைந்த பிறகு யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் வலிமையான, தரமான உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்வி நிறுவனங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு உறுதுணையாக இருக்கின்றன. இன்றைய தினம் நம் நாடு தொழில்நுட்ப ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இங்குள்ள இளைஞர்கள்தான் காரணம். 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். எனவே, நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் வேகமாக முன்னேற வேண்டும்.


இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சமூக, பொருளாதார ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய சூழலில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வது என்பது உண்மையிலேயே பெரிய சவால்தான். தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் பிரதமரின் வித்யா லட்சுமி கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏழை மாணவர்கள் எந்தவித பிணையும் இன்றி வட்டியில்லா கடன் பெறலாம்.


.


இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.உயர்கல்வி என்று வரும்போது ஆங்கில மொழி பிரச்சினை பெரும்பாலான மாணவர்களுக்கு பெரும்தடையாக இருந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆங்கிலத்தை தகவல் தொடர்புக்காக ஒரு மொழிப்பாடமாக படித்தால் போதும். உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயர்கல்வி வழங்கப்படுகிறது.


மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன் சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டியுள்ளது.


சில மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழிலில் சிறந்து விளங்குவார்கள். அவர்களின் தொழில்அறிவை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் படிப்பில் தொழில் அறிவுக்கு குறிப்பிட்ட கிரெடிட் வழங்குவது என புதன்கிழமை நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதேபோல், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.


இந்த புதிய முறையின்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது,” என்று அவர் கூறினார்.


துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி: யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் மேலும் கூறும்போது, “பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்பதுதான் யுஜிசி விதிமுறை. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பான பிரச்சினையால் தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.


துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்படுவது சரியானதாக இருக்காது. உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு வாயிலாக பல்கலைக்கழகத்தை எப்படி நிர்வகிக்க முடியும். துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி நியமிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.


அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டால் கற்பித்தல் பணியும் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படும். ஒப்பந்த முறையில் நியமிக்கப்படும் பேராசிரியர்கள் தங்கள் பணிநிலையை நினைத்து கவலைப்படுவார்கள். அவர்களால் எப்படி கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும். எனவே, கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளோம். நிதி நெருக்கடி காரணமாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது. நிதி வாய்ப்புகளை பெருக்க மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும்.


தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை அதிகரிக்கலாம். வருவாயை பெருக்க வேண்டும் என்று சொல்லி மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக்கட்டணத்தை எந்த வகையிலும் உயர்த்தக்கூடாது. ஆராய்ச்சி பணிகளுக்கு யுஜிசி, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்( சிஎஸ்ஐஆர்) போன்றவற்றிடமிருந்து தாராளமாக நிதி பெறமுடியும்,” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி