அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று சமரச பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2025

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று சமரச பேச்சு

 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் நாளை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்த நான்கு அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவை, முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவினர் இன்று சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர்.


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சரண் விடுப்பு உரிமையை வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராடி வருகின்றன.


தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பிய, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாகியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். மத்திய பா.ஜ., அரசு, தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதியும் அளிக்காத நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.


இத்திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த முடிவெடுத்த போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாக, நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் போன்றவை குறித்து ஆராய, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.


இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே, இது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக விவாதிக்க, கடந்த, 4ம் தேதி ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது.


இக்கூட்டத்தில், பிப்ரவரி, 14ல் தாலுகா அளவில, மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது, பிப்., 25ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாளை போராட்டத்திற்கான ஆயத்த பணிகளை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வந்தனர்.


இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்த, அவர்களுடன் பேச்ச நடத்த, நான்கு அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இதுதொடர்பாக, நேற்று அரசு வெளியிட்ட அறிக்கை:


பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அவற்றின் மீது உரிய முடிவுகளை காண, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, குழு அமைக்கப்பட்டு உள்ளது.


அந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிகல்வி துறை அமைச்சர் மகேஷ், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து, அதன் நிர்வாகிகளுடன், தலைமை செயலகத்தில் இக்குழுவினர் இன்று பேச்சு நடத்த உள்ளனர்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர் சங்கம்அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது தொடர்பாக, தமிழக அரசு முதலில் வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசு ஊழியர்கள் சங்கங்களுடன், அமைச்சர்கள் குழு இன்று பேச்சு நடத்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் சங்கங்கள் குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அரசின் கவனத்திற்கு, அதிகாரிகள் எடுத்து சென்றனர்.உடன் திருத்தப்பட்ட செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சு நடத்த, குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,'இன்று அமைச்சர்கள் நடத்தும் பேச்சின் முடிவை பொறுத்து, நாளைய போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்' என்றனர்.


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி