அரசு பள்ளி கட்டிடங்களை கண்காணிக்க மாதந்தோறும் ஆய்வு கூட்டம்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2025

அரசு பள்ளி கட்டிடங்களை கண்காணிக்க மாதந்தோறும் ஆய்வு கூட்டம்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

 

அரசு பள்ளிகளின் கட்டிடங்களை கண்காணிக்கும் வகையில் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டத்தை தொடக்கக்கல்வி இயக்குநரகம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஷால், குடுமியம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் விஷால் உயிரிழந்தான். இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதன்படி, இவ்வழக்கில் தொடக்கக்கல்வி இயக்குநர், தருமபுரி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.


தொடக்கக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘பள்ளி சுற்றுச்சுவரை தாண்டி விழுந்த வகுப்பறை சாவியை, ஆசிரியை ஒருவர் எடுத்து வரும்படி கூறியதை தொடர்ந்து மாணவன் விஷால், சுற்றுச்சுவரில் ஏறியபோது சுவர் விழுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


தொடர்ந்து மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், ‘‘பொது ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து இருந்திருந்தால் இது நடந்திருக்காது. எனவே, உயிரிழந்த மாணவர் விஷாலின் தந்தை வீரப்பனுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளின் கட்டிடங்களை பராமரித்து கண்காணிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை நடப்பதை தடுக்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் கல்வி அதிகாரிகள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மாதந்தோறும் குறிப்பாக விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் காலங்களில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவும் தொடக்ககல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி