பிறப்பு சான்றிதழ் தொலைந்து போய்விட்டதா? எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2025

பிறப்பு சான்றிதழ் தொலைந்து போய்விட்டதா? எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி?

 

இன்றைக்கு ஒருவர் பிறந்ததற்கு அடையாளமே பிறப்பு சான்றிதழ் தான்.. அந்த காலத்தில் பிறந்தவர்களை பதிவு கூட செய்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு பிறப்பை பதிவு செய்யாமல் அவர் வாழவே முடியாது. பிறப்பு பதிவு கட்டாயம் ஆகும். பிறப்பு சான்றிதழ் இல்லாமல் படிப்பது தொடங்கி எதுவும் செய்ய முடியாது. பிறப்பு சான்றிதழ் தான் ஒருவரின் அடையாளம். பிறப்பு சான்றிதழ் தொலைந்து போனால், அதனை எப்படி வாங்குவது, புதிதாக பிறப்பு சான்றிதழ் வாங்குவோர் எப்படி ஆன்லைனில் எளிதாக டவுன்லோடு செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


2000க்கு பிறகு பிறப்பு சான்றிதழ் வாங்காமல் விட்ட பலர் இன்று அவதிப்படுகிறார்கள். அதற்கு கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து, அதன்பிறகு அவர் விஏஓ மூலம் விசாரித்து தான் பிறப்பு சான்றிதழ் வழங்குவார். அந்த முறை எளிதானது கிடையாது. சற்று சவாலானது.. முன்பு நீதிமன்றத்தில் போய் பிறப்பு சான்றிதழ் வாங்கினார்கள். இப்போது கோட்டாட்சியரிடம் தான் விண்ணப்பித்து வாங்க முடியும். பிறப்பு சான்றிதழ் மட்டுமல்ல.. இறப்பு சான்றிதழ் வாங்கவும் கோட்டாட்சியரிடம் தான் போய் விண்ணப்பிக்க வேண்டும். அவர் தான் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையிலேயே சான்றிதழ் கிடைக்கும். எனவே பிறப்பு, இறப்பு பதிவை உடனே செய்து, சான்றிதழ் வாங்கி கொள்வது நல்லது.

அதேநேரம் ஒருவேளை பிறப்பு சான்றிதழ் வாங்கி அசல் ஆவணம் தொலைந்து போனால், எப்படி சான்றிதழ் வாங்குவது என்பதையும், புதிதாக பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைனிலேயே சான்றிதழை எப்படி டவுன்லோடு செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.


சென்னை மாநகராட்சியில் வாழ்பவர்கள் பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய ஒரு இணையதளம் உள்ளது. https://chennaicorporation.gov.in/Tamil/online-civic-services/birthCertificate.do?do=show என்ற இணையதளத்தில் பதிவு எண், குழந்தையின் பெயர், பாலினம், பிறந்த தேதி, குழந்தை பிறந்த இடம், தந்தையின் பெயர், தாயின் பெயர் போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்து டவுன்லோடு செய்யலாம்.


சென்னையை தவிர மற்ற பகுதி மக்கள் பிறப்பு சான்றிதழை https://crstn.org/birth_death_tn/BCert என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம். *RCHID என்று அழைக்கப்படும் குழந்தை பதிவு எண் வேண்டும். குழந்தை பிறப்பதற்காக தாயை மருத்துவமனையில் சேர்க்க எண் தருவார்கள். அந்த எண் தான் RCHID எண் ஆகும். அதன்பிறகு பாலினத்தை தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக எந்த மாவட்டம் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். அதில் எந்த மருத்துவமனை என்ற ஆப்சன் ஓபன் ஆகும். அந்த மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் மற்றும் வெரிபிகேசன் போன்றவற்றை பதிவு செய்தால், பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய முடியும்.


பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற முடியும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஆவணம் ஆகும்.


ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவில் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பதிவு செய்ய முடியும். 12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக்கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி