‘ஆடை வடிவடிமைப்பு’ படிப்புகளும் எதிர்காலமும் - ஒரு பார்வை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2025

‘ஆடை வடிவடிமைப்பு’ படிப்புகளும் எதிர்காலமும் - ஒரு பார்வை

 

உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. இந்த மூன்றில் ஒன்றான உடைக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நம்மை ஒருவரிடம் எடுத்துக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது உடை. உடையை வடிவமைப்பதற்கு தற்போதைய காலத்தில் ஆடை வடிவமைப்புத் துறை என பிரத்யேகமாக பட்டப்படிப்பு உள்ளது.


ஆடை வடிவமைப்புத் துறை குறித்து கோவையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: ஆடை வடிவமைப்புப் பிரிவு அறிவியல் மற்றும் கலை சார்ந்த ஒரு படிப்பாகும். தற்போதைய காலத்தில் இது ஒரு முக்கிய தொழிற் கல்வியாக மாணவர்களிடம் உள்ளது. ஆடை வடிவமைப்பு என்பது ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு நுட்பங்களை வடிவமைக்கும் ஒரு கலையாகும்.


ஆடை வடிவமைப்பாளர் ஒரு சிந்தனையை ஒரு வடிவமைப்பாய் மாற்றி, பின்னர் அந்த வடிவமைப்பை தான் நினைத்தபடி ஆடையாகமாற்றுவார். ஆடை வடிவமைப்புக்கு இளநிலை, முதுநிலையில் படிப்புகள் உள்ளது. இளநிலையில், பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன், பி.வொக் (b.voc) கார்மென்ட் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன் துறையில், ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, சிகை அலங்காரம், முக அலங்காரம் போன்றவற்றையும் சிறப்புத் தொழிற்கல்வியாக மாணவர்கள் படிப்பர்.


பி.வொக் கார்மென்ட் டிசைனிங் பிரிவில் ஆடை வடிவமைப்புடன் சேர்த்து, ஆடையின் தன்மை மற்றும் பின்னலாடைகளை பற்றியும் படிக்கலாம். ஃபேஷன் டெக்னாலஜி பிரிவில் ஆடையில் அறிவியல் நுட்பங்களை சேர்த்து கூறுவது ஆகும். இப்படிப்புக்கு அறிவியல் அடித்தளம் மிகவும் அவசியமாகும். ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு நூல் துணியாய் மாறி ஆடையாய் உருமாற்றம் பெறும் வரையில் அமைந்திருக்கும்.


மேற்கண்ட ஆடை வடிமைப்புத் துறைகளில் சேர பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவையும் தேர்ந்தெடுத்து படித்திருக்கலாம். அதே சமயம் ஃபேஷன் டெக்னாலஜி பாடத்துக்கு மட்டும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவு படித்திருப்பது அவசியமாகும். ஆடை வடிமைப்பு படிப்புகளில் தையல் ஒரு முக்கியப் பிரிவாகும். இப்படிப்புகளை படிக்க தையல் தெரிந்திருக்க வேண்டும். தையல் தெரியவில்லை என்றாலும், இக்கல்வி படிக்கும் போது கற்றுத் தரப்படும்.


தற்போதைய நவீன உலகில் ஆடை வடிவமைப்புக்கு வேலை வாய்ப்பு சிறப்பானதாக உள்ளது. ஆடை வடிவமைப்பு பயின்ற மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தவிர, ஆடை வடிவமைப்பு சார்ந்த சுய தொழிலையும் செய்யலாம். மேலும், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்காம ல் சுயமாக தொழில் செய்யவும் இப்படிப்புகள் உதவுகின்றன என்று அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி