யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் சாதிக்க துணைபுரியும் பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2025

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் சாதிக்க துணைபுரியும் பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பு!

பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பவர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் என இலவச ஐஏஎஸ் பயிற்சியாளரும், கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை தலைவருமான பி.கனகராஜ் கூறுகிறார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியது: “பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பைப் பொறுத்தவரையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முக்கிய பாடமாக உள்ளது. யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வில் அரசியல் அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்கள் உள்ளது. முதன்மைத் தேர்வில் பொது அறிவு இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்கள் வருகிறது. பொது கட்டுரை தாளில் 250 மதிப்பெண் வருகிறது.


சிவில் சர்வீஸ் போட்டி தேர்வு நேர்காணலில் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படும். சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் விருப்ப பாடமாக அரசியல் அறிவியலை தேர்ந்தெடுத்தால் 500 மதிப்பெண்கள் வரும். சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் மொத்த மதிப்பெண்களில் 40 சதவீத அளவுக்கு அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. அதேபோல டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் 20 சதவீத மதிப்பெண்கள் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் போட்டித் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் அரசியல் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.


அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பணிக்கு சேர விரும்புவோர் அரசியல் அறிவியல் பாடத்தை எடுத்து படிக்கலாம். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு செல்வோரும் அரசியல் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில வழியில் அரசியல் அறிவியல் பாடத்தை படித்தால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு செல்லலாம். அரசியல் மற்றும் அமைப்புகள் சார்பில் சிந்தனை கூடத்தில் (திங்க் டேங்கர்ஸ்) சமூக அக்கறை உள்ளவர்கள் நடத்துவதில் பங்கேற்று மக்களுக்கு சிந்தனை, கருத்துகளை ஊடகங்களில் எழுதலாம்.


நாட்டில் 700 எம்.பி., முதல் சுமார் 10,000 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். எனவே அரசியல் அறிவியலை படித்த மாணவர்கள், எதிர்காலத்தில் அரசியலை எதிர்காலமாக தேர்ந்தெடுக்க சரியான படிப்பு அரசியல் அறிவியல் பாடம் என்பதை உணர வேண்டும். பன்னாட்டு அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியில் பணியாற்றவும் அரசியல் அறிவியல் பாடம் முக்கியமானதாகும். பொது வாழ்க்கையில் ஆர்வம் உள்ளவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுக்கலாம்.


தேர்தல் காலங்களில் தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடும் பணியில் ஈடுபடுவோர் அரசியல் அறிவியல் படித்தவர்களாக இருப்பர். அரசியல் கட்சிகளில் தரவுகளை தொகுத்து வழங்கும் பணியிலும் கூட அரசியல் அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி