ஈட்டிய விடுப்பு ஒப்படைவு : யாருக்கு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2025

ஈட்டிய விடுப்பு ஒப்படைவு : யாருக்கு எப்போது?

ஈட்டிய விடுப்பு ஒப்படைவு : யாருக்கு எப்போது?


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


பெருந்தொற்றால் கடந்த ஆட்சியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதைய ஆட்சியில் மறுதேதி குறிப்பிடாது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்யும் முறையானது, மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை 35 நாள் 30.06.2025ன் படி, தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி, பல்கலை., & அரசு நிறுவன ஊழியர்களுக்கு 01.10.2025 முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.


பணி நியமன நாள் முதல் ஒவ்வொரு 22 நாள்களுக்கு 1 நாள் வீதம் முழு ஆண்டிற்கும் 17 (ஆசிரியர்கள் தவிர்த்த பருவ விடுமுறை இல்லா ஊழியர்களுக்கு 30) நாள்கள் என வரவாக்கப்படும் ஈட்டிய விடுப்பில் 15 நாள்களை மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை ஒப்படைவு செய்து பணமாக்கிக் கொள்ளலாம்.


பணமாக்கக் கோரும் ஒப்படைவு தேதி என்பது பணி நியமன தேதி அமைந்துள்ள காலாண்டின் முதல் தேதியாகும். எளிமையாகக் கூறவேண்டுமென்றால், ஊதிய உயர்வு அனுமதிக்கப்படும் மாதமாகும்.


ஜனவரி, பிப்ரவரி, மார்ச் : 01.01


ஏப்ரல், மே, ஜூன் : 01.04


ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் : 01.07


அக்டோபர், நவம்பர், டிசம்பர் : 01.10


இவ்வாறுதான் ஈட்டிய விடுப்பு ஒப்படைவு நாள் கணக்கிடப்படும். ஆனால், அலுவலகச் சூழல்கள் சார்ந்து இந்த முறையான தேதி பின்பற்றப்படாது உள்ளது.


[IFHRMSல் இனி மேற்கண்ட முறையான தேதியைத் தவிர்த்து நினைத்த மாதங்களில் பணமாக்கிக் கொள்ள முடியாதபடி வரைமுறை செய்யப்படவும் வாய்ப்புண்டு.]


தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம்.


அதன்படி ஜனவரி - செப்டம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.


அக்டோபர் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.


27.04.2020க்குப் பின்னர் பணியேற்று முதல் முறையாக  ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்யவுள்ளோர், மேலே குறிப்பிட்ட தாங்கள் பணியேற்ற காலாண்டின் முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு பணமாக்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி