தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 முக்கிய அம்சங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2025

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 முக்கிய அம்சங்கள்

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையில் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து, 1 முதல் 8-ம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி, பாடப் புத்தகங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பின் கருத்துகளை கேட்டு சுமார் 520 பக்கங்கள் கொண்ட கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர்.


அதன்பின் அந்த அறிக்கையானது 2024 ஜூலை 1ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. ஆனால், ஓராண்டு தாமதமாக பள்ளிக் கல்விக்கான கல்விக் கொள்கை -2025 இன்று (ஆக.8) வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


> கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு குறைதீர் கற்பித்தலை வழங்கி, வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.


> முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர் மற்றும் பெண் குழந்தையை பள்ளியில் தக்க வைப்பதற்கும், அவர்களின் கற்றல் விளைவுகளை முன்னேற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.


> வளரிளம் பருவத்தினர் பாகுபாடு, பாலின அடிப்படையிலான வன்முறை, முடுவெடுக்கும் திறன் முதலிய வாழ்க்கை திறன்சார் சமூக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சரியானவற்றை தெரிந்தவர்களாக, நெகிழ்வுத்தன்மை உடையவர்களாக, திறன் பெற்றவர்களாக வளர்வதற்கு தேவையான கலைத்திட்டம் இணைக்கப்படும்.


> 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சார் திட்டம் சு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


> ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு இருமுறை தங்கள் கால அட்டவணையில் நூலக நாளை தவறாமல் நடைமுறைப்படுத்தி, மாவட்ட அல்லது சிறப்பு நூலகத்தில் நாள் முழுவதும் குழந்தைகள் படிப்பதை உறுதிசெய்யவேண்டும்.


> மாணவர்களின் திறன்கள் மற்றும் தரவுகளை சேகரிக்க பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு (ஸ்லாஸ்) நடத்தப்படும். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும் இந்த திட்டத்தில் தேவையான மாற்றங்களை கொண்டுவரவும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 3-ம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.


> மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டும்.


> ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கமாகும்.


> தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்ட விதிகளின்படி மாணவர்கள் கூடுதலாக தம் தாய்மொழியை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும்.


> புலம்பெயர்ந்தோர் மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு இரு மொழிக் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கற்றல் இடைவெளிகளை குறைக்கலாம்.


> தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும்.


> சிலம்பம், சடுகுடு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் போன்ற உள்நாட்டு, நவீன விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இணைக்க வேண்டும். அதில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்கவேண்டும்.


> மனப்பாடத்தின் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை விட்டு பாடக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறவேண்டும்.


> 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதிசெய்ய வேண்டும். இந்த தேர்ச்சியானது ஆண்டு இறுதித் தேர்வுகளின் அடிப்படையில் இல்லாமல், திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி இருக்க வேண்டும்.


> தமிழகத்தில்10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தவேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.


> ஆசிரியர்களின் பணிதிறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.


> அனைத்து‌ பள்ளிகளிலும் தன்‌ மதிப்பீடு, திறந்தநிலை வினாக்கள்‌, குழு மதிப்பீடுகள்‌, செயல் திட்டப்‌பணி, ஒட்டுமொத்தச்‌ செயல்பாடுகள்‌ அடிப்படையிலான மதிப்பீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, “தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் சூழல் மாறும்போது அதற்கேற்ப கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவோம். 9-ம் வகுப்பு படிக்கும் போதே உயர் கல்வியை எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் என்பதை வழிகாட்டும் நடைமுறைகளை கொண்டுவர உள்ளோம். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்ட 3, 5, 8-ம் வகுப்புக்கான தேர்வு கிடையாது.


மாநில கல்விக் கொள்கையானது ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறதோ அவை எந்த தடையும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்கிறது. சமக்ர சிக்‌ஷா நிதி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறோம். பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு இனி தேவையில்லை என்பதால் அதை எடுத்துவிட்டோம். நடப்பாண்டில் இருந்தே அதை செயல்படுத்த உள்ளோம்” என்று அவர் கூறினார்.


குழுவினர் அதிருப்தி: இது குறித்து மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழுவினர் சிலர் கூறும்போது, “மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், இது முழுமையான வடிவில் இல்லை. நாங்கள் வடிவமைத்து வழங்கிய அறிக்கையில் இருந்து முழுவதும் மாறுபட்டதாக இந்த கல்விக் கொள்கை உள்ளது. இதிலுள்ள பெரும்பாலான அம்சங்களை எங்கள் குழுவினர் பரிந்துரை செய்யவில்லை.


ஒரு கல்விக் கொள்கை என்பது தற்போதைய கல்வி முறையை வருங்கால சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் அடுத்தக் கட்டத்துக்கு மேம்படுத்தி கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த கல்விக் கொள்கையில் தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகளின் விவரங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. கிட்டதட்ட மானியக் கோரிக்கை போல் இருக்கிறது.


இந்தக் கல்விக் கொள்கை வடிவமைப்புக்காக 2 ஆண்டுகளாக தீவிரமாக உழைத்துள்ளோம். ஆனால், எங்கள் குழுவுக்கான அங்கீகாரம் முறையாக வழங்கப்படாதது வருத்தமாக உள்ளது. வெளியீட்டு விழாவுக்கு கூட அழைக்கப்படவில்லை. மேலும், உயர் கல்வியை விடுத்து பள்ளிக் கல்விக்கு மட்டும் தனியாக கல்விக் கொள்கை வெளியிட்டதற்கான காரணமும் புரியவில்லை” என்றனர்.

1 comment:

  1. கல்வி குழு அமைத்து பெருமை பேசுவதைவிட உலக கல்வி தரத்திற்க்கு போட்டி போடும் பாடதிட்டம் மாற்றி அமைக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி