குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லையெனில் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2025

குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லையெனில் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்!

 

அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


அதாவது, 1 முதல் 5-ம் வகுப்புக்கு 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும்.


இது தவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை 50-க்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.


அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியர்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவர் வீதம்) அனுமதிக்க வேண்டும். மேலும், 9, 10-ம் வகுப்பில் தலா 40 மாணவர் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 60-க்கு அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். பணி நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகேயுள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.


இது தவிர ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கிலவழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள காலஅவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி