உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க சிறப்பு தகுதித்தேர்வு நடத்த வேண்டும்! - அன்புமணி
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்தின்படி சரியாக இருந்தாலும் லட்சக்கணக்கான ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாகும்.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009&ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8&ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது அடிப்படைத் தகுதியாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011&12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதால், அதன்பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற வினாவுக்கு விடையளிக்கும் வகையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். இவர்கள் தவிர தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழப்பர். அவர்களில் பெரும்பான்மையினர் 50 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில் நடப்புப் பாடத்திட்டத்தின்படி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலான ஒன்றாகும். 50 வயதைக் கடந்த ஆசிரியர்களின் குடும்பங்களில் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகள் இருக்கும் என்பதால், குடும்பத் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணியில் தொடர வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய சூழலில் அவர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் பணி விலக வேண்டும் என்றால் அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாத ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசமாகும்.
கல்வி உரிமைச் சட்டப்படி தகுதித் தேர்வு கட்டாயம் என்ற அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், எதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுத் தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் இது தான். அதனால் தான் 2012&ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆசிரியர் பணியைப் பொருத்தவரை ஒருவர் சிறப்பாக கற்பிப்பதை அவருக்கு வழங்கப்படும் பயிற்சியும், அனுபவமும் தான் தீர்மானிக்குமே தவிர, தகுதித் தேர்வு தீர்மானிக்காது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அடுத்த இரு ஆண்டுகளில் பணி நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆசிரியர்களில் பலர் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள். அந்த ஆசிரியர்கள் அவர்களின் பணிக்காலத்தில் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரை உருவாக்கியிருக்கக் கூடும். சில ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகளைக் கூட உருவாக்கியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக பணி நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். அவர்களும் இப்போது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது நியாயமற்றது. இந்தியா முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லை. அவ்வாறு இருக்கும் போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது சரியல்ல. இது தொடர்பான நியாயங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்க தமிழக அரசு தவறியதன் விளைவு தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்; அது தான் தீர்வு காண வேண்டும்.
கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றால், பாதிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி, அவர்கள் அனைவரும் பணியில் நீடிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி