TET தீர்ப்பும்! திசையும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2025

TET தீர்ப்பும்! திசையும்!!

 

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சார்ந்து மும்பை & சென்னை உயர்நீதிமன்றங்களில் பெறப்பட்ட தீர்ப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 21 வழக்குகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட வழக்கில் TET தொடர்பாக நாடு முழுமைக்குமான பொதுவான நடைமுறையாக 01.09.2025 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இருந்து பதவி உயர்விற்கு TET தேவையா? இல்லையா? என்பது சார்ந்தும், சிறுபான்மையினக் கல்வி நிறுவன ஆசிரியர்களின் TET தேர்ச்சி சார்ந்தும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.


தீர்ப்பின் சுருக்கம் :


1. மதம் / மொழி வழிச் சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்களின் மனுக்கள் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.


2. பதவி உயர்வும் பணி நியமனமாகவே கருதப்படும். எனவே பதவி உயர்விற்கும் அடிப்படைத் தகுதிகளுடன் TET தேர்ச்சியும் கட்டாயம்.


3. சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்களைத் தவிர்த்த மற்ற கல்வி நிறுவனங்களில் (அரசு ஊதியத்தில்) பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


4. தேர்ச்சி பெறத் தவறியவர்கள் 2 ஆண்டுகளுக்குப் பின் பணியில் தொடரக் கூடாது.


5. 31.08.2030க்குள் பணி ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு மட்டும் TET தேர்ச்சி பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


6. 31.08.2030க்குள் பணி ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர் பதவி உயர்வு பெற விரும்பினால் அவர் TET தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


தீர்ப்பின் படி TET தேர்ச்சி பெற வேண்டியோர் :


TET என்பதே  RTE சட்டத்தின் படியானது தான் என்பதால், அனைத்துத் துறை சார்ந்த

* SGT

* BT

பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களும், இப்பணியிடங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் பதவி உயர்வுப் பணியிடங்களாக உள்ள,

* Primary School HM

* Middle School HM

* High School HM

பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களும் பணியில் தொடர TET தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


TRB தேர்வர்களுக்கு TET கட்டாயமா ?


ஆம். TRB தேர்வுகள் மூலம் பணிக்கு வந்த BT & BRTEகள் மேலே கூறப்பட்ட பணியிடங்களில் பணியில் தொடர தற்போதைய நிலையில் TET தேர்ச்சி பெற்றாக வேண்டும். TET & TRB Recruitment இரண்டும் வெவ்வேறானதாகக் கருதப்பட்டதால்தான், TRB மூலம் நிரப்பப்பட்ட BT பணி இடங்களும் 2010-ற்குப் பின் TET (Paper 2) மூலம் நிரப்பப்பட்டன.


CUTOFF DATE ஏதும் இல்லையா? :


RTE சட்டம் நடைமுறைக்கு வந்த பின் / வருவதற்கு முன் அல்லது NCTE ஆணையில் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட (29.07.2011) தேதிக்கு முன் / பின் என்று எந்த வேறுபாடும் இல்லை. இன்றை தேதியில் பணியில் இருப்போர் அனைவருக்கும் TET தேர்ச்சி அடிப்படை நியமனத் தகுதியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?


தற்போதைய தீர்ப்பின் அடிப்படையில் NCTE (National Council for Teacher Education) புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிடும். அதன் பின்னரே இது 100% நடைமுறைக்கு வரும்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், _முழுமையான தீர்ப்பு (தீர்ப்பின் நகல்) வெளிவந்த பின்னர் சட்ட வல்லுந‌ர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்; ஆசிரியர்களை அரசு கைவிடாது_ என்று ஊடகங்களுக்குப் பேட்டியில் நம்பிக்கை அளித்துள்ளார்.


மாநில அரசுகள் மாற்று ஏற்பாடாகத் தனிச்சட்டம் இயற்ற இயலுமா என்றால் அத்தகைய அதிகாரமிருப்பின் TET தேர்வையே மாநிலங்கள் தவிர்த்திருந்திருக்க இயலும். எனவே, மாநில அரசுகள் சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க மட்டுமே வாய்ப்புள்ளது. இனி தனிச்சட்டமியற்ற வாய்ப்பில்லை என்பது எனது தனிப்பட்ட தெளிவு.


ஆசிரியர்களுக்கு முன்புள்ள வாய்ப்புகள் :


1. வழக்கில் தொடர்புடையவர்கள் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பணிப்பாதுகாப்பு உரிமைகளை முன்வைத்து மேல்முறையீட்டிற்குச் (சீராய்வு மனு) செல்லலாம். அதன் தீர்ப்பு கிடைக்கும் வரை பதவி உயர்வு காலதாமதமாகும்.


2. பணியிலுள்ளோருக்கான தனிப்பட்ட சிறப்பு TET தேர்வுகளை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 4 முறை நடத்தி அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க சங்கங்கள் மூலம் அரசிடம் வலியுறுத்தலாம். 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற்றபின் பணி வரன்முறை & ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்ற நிபந்தனையின் பேரில், பணி மூப்பின் அடிப்படையில் தற்போது பதவி உயர்வை வழங்கிட சாத்தியக்கூறுகளை ஆய்ந்து அதன்படி அரசிடம் கோரிக்கை வைக்கலாம்.


TET தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா?


100% வாய்ப்பில்லை. பணியில் இருப்போருக்கானாலும் புதியவர்களுக்கானாலும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் தான் நிர்ணயிக்கப்படும். பணியிலுள்ளோருக்காக ஒருவேளை மதிப்பெண் குறைக்கப்பட்டால், அதுவும் வழக்கிற்குள்ளாக வாய்ப்புள்ளது. எனவே அப்படியொரு எதிர்பார்ப்பே தேவையற்றது.


பணியிலுள்ளோருக்கு சிறப்புத் தேர்வு நடத்தலாமா?


தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


யார் எந்தத் தாள் எழுத வேண்டும்?


* TET PAPER 1 : SGT & Primary School HM 


* TET PAPER 2 : BT உள்ளிட்ட மற்றவர்கள்


தற்போதைய சார்நிலைப் பணி விதிகளின்படி, இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக முடியாது என்பதால், BT பதவி உயர்வை எதிர் நோக்கி TET 2 தேர்ச்சி பெற்றிருப்போர், முதலில் TET 1 எழுதி தனது பணியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் Primary HM ஆனால், அதிலிருந்து BTயாக தற்போது முடித்துவைத்திருக்கும் TET2 உதவக்கூடும்.


NCTE பணியிலிருப்போர் & பதவி உயர்வு குறித்த புதிய நெறிமுறைகளை வெளியிடும் போது, TET 1 & 2 யார்யாருக்கு பணியில் தொடர போதுமானது என்பது குறித்தும், பதவி உயர்வின் வழி வருவோருக்கு ஒரு தாளே போதுமானதா என்பது குறித்தும் தெளிவுரை வழங்கினால் மட்டுமே BTயாக விரும்பும் ஒரு இடைநிலை ஆசிரியர் 2 தாள்களையும் தேர்ச்சி பெற்றாக வேண்டுமா இல்லையா என்பதும் தெளியவரும்.


பின்குறிப்பு :


_இவையாவும் TET சார்ந்த எனது தனிப்பட்ட புரிதல் மட்டுமே. தாங்கள் சார்ந்துள்ள சங்கத்தின் மூலம் இதைவிட மேலான தெளிவையும் சரியான தீர்வையும் பெறலாம்._

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி