School Morning Prayer Activities - 16.10.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2025

School Morning Prayer Activities - 16.10.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2025

திருக்குறள் 

குறள் 981: 


கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து 

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு 


உரை


கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.


பழமொழி :

Effort never goes unrewarded. 


முயற்சி ஒருபோதும் வீணாகாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்


2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :


நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன் .நான் இன்று நன்றாக வாழ்வதற்கு எனது ஆசிரியருக்கு கடமைப்பட்டுள்ளேன்- மாவீரன் அலெக்சாண்டர்


பொது அறிவு : 


01.செவாலியர் விருதை வழங்கும் நாடு எது?


பிரான்ஸ் -France


02.தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் சபாநாயகர் யார்?


J.சிவ சண்முகம் -J. Sivashanmugam


English words :


Gorgeous-beautiful 



Enormous-huge


தமிழ் இலக்கணம்: 


இடைச்சொல்: பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையில் வந்து பொருள் தருபவை. இடைச்சொற்கள் தனித்து நிற்காமல், பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லின் துணையோடு வரும். 

ஏ, ஓ, உம், தான், இன், கு, உடைய, ஆனால், போல, மற்று ஆகியவை இடைச்சொல் ஆகும் 

எ.கா 

1. அவனுக்கு கொடுத்தான்

2. மேலே வந்தான்


அறிவியல் களஞ்சியம் :


 வட்டமாக, மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படும். சமச்சீரைக் கட்டுப்படுத்தும் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் (Sensitive liquid) உடல் சுற்றுவது நின்றபிறகும் தொடர்ந்து சுற்றிக் கொண்டுள்ளது. ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்ம நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது.


அக்டோபர் 16


உலக உணவு நாள் (World Food Day)


உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.


நீதிக்கதை


 சோதனை


ஒரு ஊரில் கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கு சிவா என்று ஒரு மகன் இருந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சொந்தமாக சுயதொழில் செய்து வந்தான். ஆரம்பத்தில் அவன் செய்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்படியே சில மாதங்கள் கடந்தன. திடீரென அவன் செய்த தொழிலில் மந்தமான போக்கு ஏற்பட்டு பெரும் நஷ்டம் அடைந்தான். எனவே என்ன செய்வது என்று புரியாமல் மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டான்.


தன் மகனின் சூழ்நிலையைக் கண்ட கணேசன், மகனை அழைத்துக் கொண்டு வேகமாக சமையலறைக்குள் சென்றார். சமையலறையில் இருந்து மூன்று பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு உருளைக்கிழங்கையும், இரண்டாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு முட்டையையும் போட்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வைத்து வேக வைத்தார். உருளைக்கிழங்கும், முட்டையும் நன்கு வெந்ததும், இரண்டையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டார்.


பிறகு மூன்றாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் டீத்தூளை கலந்து அடுப்பில் வைத்தார். சூடான டீ தயார் ஆனது. சூடான டீயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு காபி கப்பில் ஊற்றி சூடாக தன் மகனுக்கு கொடுத்தார். சிவாவும், அப்பா கொடுத்த டீயை வாங்கிப் பருகினான். அப்போது கணேசன் தன் மகனிடம் கேட்டார். சிவா! நீ இப்போது நன்றாக வெந்துள்ள உருளைக்கிழங்கு போன்றவனா? அல்லது முட்டையைப் போன்றவனா? அல்லது டீத்தூளைப் போன்றவனா? சிந்தித்துப் பார்த்து பதில் சொல் என்றார்.


அதற்கு சிவா, அப்பா! எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அதற்கு கணேசன், உருளைக்கிழங்கு, முட்டை, டீத்தூள் ஆகிய மூன்று பொருட்களும் ஒரே எதிரியாகிய கொதிக்கும் தண்ணீரைத்தான் சந்தித்தன. அதில் முட்டையானது, தனது கடினமான வெளித்தோலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்தாலும், தனக்குள் இருந்த கருவை கடினமாக்கிவிட்டது. உருளைக்கிழங்கோ, கொதிக்கும் தண்ணீரில் இளகிப் பலவீனப்பட்டுவிட்டது. ஆனால், டீத்தூளோ வெந்நீரை மணமுள்ளதாக்கி சுவையானதாக மாற்றிவிட்டது.


இந்த முட்டை, உருளைக்கிழங்கு மற்றும் டீத்தூளைப் போலத்தான் மனிதர்களில், ஒரு சிலர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைத் தாம் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றுகின்றார்கள். அதைப்போல் ஒரு சிலர் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெளிகாட்டாமல் முட்டை போல தோற்றமளித்தாலும் உள்ளே மனதளவில் விரக்தியடைந்து விடுகின்றார்கள். வேறு சிலர் உருளைக்கிழங்கு போல துன்பங்களில் தம்மைக் கரைத்துக் கொண்டு மனத்தோற்றம், வெளித்தோற்றம் ஆகிய இரண்டிலும் கோழைகளாகி விடுகின்றனர். இப்போது என் கேள்வி உனக்கு புரிகிறதா? என்று சிவாவிடம் கணேசன் கேட்டார்.


அதற்கு சிவா, அப்பா இனி நான் டீத்தூளைப் போன்றவன் என்று உற்சாகமாகப் பதில் சொன்னான். இன்று முதல் நான் டீத்தூளைப் போலவே எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை நான் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டு வாழ்வேன் என்று உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறினான். சிவா கூறியது போலவே புத்துணர்ச்சியுடன் தொழிலில் லாபம் பெற என்ன செய்ய வேண்டும், என்ன யுக்திகளை கையாள வேண்டும் என்று சிந்தித்து, அதை தொழிலில் புகுத்தி செயல்பட ஆரம்பித்தான். சில மாதங்களிலேயே அவன் செய்து வந்த சுயதொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.


நீதி : சோதனையை சாதனைகளாக மாற்ற முயல வேண்டும்.


இன்றைய செய்திகள் - 16.10.2025


⭐தீபாவளி முன்னிட்டு இன்று முதல் கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்


⭐கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - புழல் ஏரியில் இருந்து 700 கன அடி நீர் திறப்பு


⭐ பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிக்கிடையே எல்லை வழியே நடைபெறும் பரஸ்பர வணிகத்துக்கான எல்லை 2வது நாளாக மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀ஐசிசி தரவரிசையை ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்


* ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.


Today's Headlines


⭐ Special Connection Buses will be operated from Today for the Diwali festival.


⭐ Increase in water level in the Kosasthalai river - 700 cubic feet of water released from Puzhal Lake


⭐ The tension between Pakistan and Afghanistan has increased as the border between the two countries has been closed for the second day of the mutual business.


🏀 Sports News


🏀 The Afghan players who occupied the ICC rankings


* Ibrahim Satran has jumped 8 places in the ODIs rankings and secured 2nd place. Indian player Jaiswal has jumped 2 places in the Test batting rankings and secured 5th place.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி