டெட் தேர்வு தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழும சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து ஆசிரியர்களை பாதுகாக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று எழுதிய கடிதம்: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர 2 ஆண்டுகளுக்குள் டெட் தகுதியைப் பெற வேண்டும் என்றும் தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமானது கடந்த 2010 ஆக.23-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வுகளில் இருந்து தொடக்கத்தில் விலக்கு அளித்திருந்தது. இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட் டுள்ள தற்போதைய தீர்ப்பு, ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட விலக்கினை மீறி, டெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் இப்போது 2 ஆண்டுகளுக்குள் டெட் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த நிர்வாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும். பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் ஆசிரியர்களின் உரிமைகளை மீறுவதாக உள்ளது. இது ஆசிரியர்களின் நியமனத்தின்போது, நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வ விதிகளின் கீழ் முழுமையாக தகுதி பெற்று, முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக பாதிக்கிறது.
அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதோடு 2011-ல் டெட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு டெட் தேர்வை முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது, பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது. இது மாநிலத்தில் நிர்வாக ரீதியாக சாத்தியமற்ற ஒரு நிலையை உருவாக்குகிறது.
பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துகிறது.
ஆட்சேர்ப்பு சுழற்சிகள், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கும் தன்மை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணி நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில், எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்களை மாற்றுவது சாத்தியமற்றது மேலும், நீண்டகாலமாக பணி புரிந்து வரும் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை மறுப்பதும் பெரிய அளவிலான சிரமத்தையும், தேக்க நிலையையும் ஏற்படுத்தும்.
ஆர்டிஇ சட்டப் பிரிவு 23-ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புரைகள் காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள். இவற்றை கருத்தில் கொண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்டம் ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி