கால்நடை ஆய்வாளர் கிரேடு 2 பணியிடத்துக்கான கல்வித் தகுதியை 12-ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பாக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் இப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளர்கள் கிரேடு 2 பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு என இருந்த அடிப்படை கல்வித்தகுதியை ‘ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு’ என கல்வித்தகுதியை உயர்த்தி தமிழக அரசு 2025 ஆக.15-ல் அரசாணை வெளியிட்டது.
இதைப் பின்பற்றி அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பிலும் இப்பணியிடங்களை போட்டித்தேர்வு வாயிலாக நிரப்ப அறிவி்ப்பாணை வெளியிடப் பட்டது.
இந்த அரசாணை மற்றும் டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பாணை இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும் சரண்யா, சுதாகர், பிரேமா, உஷா பிரியா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி, ‘‘தமிழக அரசி்ன் இந்த அரசாணை ஏற்புடையதல்ல. மனுதாரர்கள் அனைவரும் 15 முதல் 17 ஆண்டுகளுக்கு முன்பாக பணியில் சேர்ந்தவர்கள். கால்நடை உதவியாளர் பணியில் இருந்து கால்நடை ஆய்வாளர்கள் கிரேடு 2 பதவி உயர்வுக்கான 11 மாதபயிற்சியையும் நிறைவு செய்துள்ளனர்.
ஆனால் திடீரென இப்பணிக்கான கல்வித்தகுதியை 12-ம் வகுப்பில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு என நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருப்பது சட்ட விரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணையால் கால்நடைத்துறையில் பணியில் உள்ள பல ஊழியர்களுக்கு பதவி உயர்வே கிடைக்காமல் போய் விடும்’’, என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு ப்ளீடர் ஆர்.யு.தினேஷ் ராஜ்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர் பி.விஜய் ஆகியோர், ‘‘கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர் கிரேடு 2 பணியிடமானது ‘குரூப் -2ஏ‘ என்ற நேர்காணல் பணியிடம்.
இப்பணியிடத்தில் நியமிக்கப்படுபவர்கள் உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் உள்ளிட்ட நிர்வாக பதவிகளுக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ளது என்பதால்தான் தமிழக அரசு இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதியை 12-ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பாக உயர்த்தியுள்ளது’’ என வாதிட்டனர்.
புதிய விதி வகுக்க முடியாது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவி்ல், ‘‘கால்நடை ஆய்வாளர் கிரேடு 2 பணியிடம் என்பது பாராமெடிக்கல் பணிகளுக்கு இணையான பணி என்பதால், கால்நடை உதவியாளர்களாக பணியாற்றி பதவி உயர்வு கோருபவர் களுக்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சியுடன் கூடிய 11 மாத கால பயிற்சியே போதுமானது.
இப்பணிக்கு பட்டப்படிப்பு அவசியம் இல்லை. அதுவும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு எனக்கூறும்போது பிஏ, பி.காம் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர் களாக இருக்க முடியாது.
மேலும் இந்திய கால்நடை மருத்துவ பேரவை சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு புதிதாக விதிகளை வகுக்க முடியாது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், இப்பணியிடங்களை நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பாணை யும் ரத்து செய்யப்படுகிறது.
இப்பணியிடங்களை நிரப்ப இந்திய கால்நடை கவுன்சில் சட்டத்தில் என்ன தகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளதோ அதைப் பின்பற்றியே நிரப்பவேண்டும்’’ என உத்தரவிட் டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி