TET 2026 பணிச்சான்று - தேவையின்றி அடுக்கப்படும் ஆவணங்கள்! தேர்வு & தேர்தல் காலத்தில் அவதிக்குள்ளாகும் ஒட்டுமொத்த கல்வித்துறை! தீர்வு யார் கரங்களில்?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
ஆசிரியர் பணியில் உள்ளோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026ற்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களின் Service Certificate தேவை. பணி நியமன அலுவலர் என்ற வகையில் தொடக்கக் கல்வித் துறைக்கு மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளிக் கல்வித்துறைக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் அளிக்கும் பணிச் சான்றிதழ் தான் அங்கீகரிக்கப்படும்.
ஆனால், மேற்படி அலுவலகங்களில் ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றைப் பராமரிக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில்தான் DEO / CEO ஆசிரியர்களுக்கான பணிச்சான்றிதழ்களை வழங்க இயலும்.
இந்தப் பரிந்துரையை வழங்கிட, பணி நியமனம் தொடங்கி, SRன் முதல்பக்கம், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் என ஒவ்வொரு ஆசிரியரிடம் சராசரியாக 25 - 50 தாள்கள் அடங்கிய ஆவணங்கள் 2 / 3 பிரதிகளில் தேவைப்படுவதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
தற்போது தேர்விற்கு விண்ணப்பிப்போரில் 99% தேர்வுநிலை / சிறப்புநிலை பெற்றவர்களே. அந்நிலைக்கான அங்கீகாரத்தின் போதே மேற்படி ஆவணங்களையெல்லாம் முறையாகச் சமர்ப்பித்து சரிபார்க்கப்பட்டு அவர்தம் பணிப் பதிவேடுகளில் உரிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.
அவ்வகையில் 100% சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணிபுரிந்து வருவோரின் கல்வித் தகுதிகளையும் பலமுறை சரிபார்த்து வட்டார / மாவட்ட அளவிலான பணிமூப்புப் பட்டியலில் சார்ந்த அலுவலகங்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களிடம் தற்போது பணிச் சான்று வழங்கிட அடுக்கடுக்கான ஆவணங்கள் கேட்கப்படுவதாகக் கூறப்படுவது என்பது என்னவகையான நடைமுறை என்று புலப்படவில்லை.
மேலும், பணிப்பதிவேட்டின் முன் பக்க நகல் உட்பட அனைத்து ஆவணங்களையும் நகலெடுத்து சமர்ப்பிக்க வேண்டுமெனில், பணிப்பதிவேடு (SR) என்ற ஒன்று எதற்காகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி இதுவரை சங்கங்களால் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு ஆசிரியர் தனக்கான பணிச் சான்று கோரி விண்ணப்பிக்கையில் அதிலுள்ள தரவுகள் பணிப்பதிவேட்டின் படி சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து சரி எனில் அடுத்த மட்டத்திற்கு அனுப்புவதும், தவறு எனில் உரிய ஆவணங்களைக் கேட்டு சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளைச் செய்து அதன்பின் அடுத்த மட்டத்திற்கு அனுப்புவதுதான் பணிப்பதிவேட்டைப் பராமரிக்கும் அலுவலகத்தின் பணியாக அடிப்படைப் பணிகளுள் ஒன்றாக இருக்கக்கூடும்.
அதைவிடுத்து பதிந்த பதிவுகளுக்கே மீண்டும் மீண்டும் நகல்கள் கேட்பதால், அதுவும் பணிப்பதிவேட்டின் பதிவுகளின் நகல்களையும் சேர்த்துக் கேட்பதால், பணிப்பதிவேட்டுப் பராமரிப்பு அலுவலர் இம்முறை மட்டும் சராசரியாக 25 தாள்களில் 300 ஆசிரியர்களிடம் 2 நகல்களில் 15,000 தாள்கள் அடங்கிய விண்ணப்பங்களைப் பெற்று அதில் ஒப்பமிட்டு அனுப்பும் நிலையில், மாவட்ட (கல்வி மாவட்ட) அளவில் 2,000 ஆசிரியர்களுக்கான பணிச் சான்றிதழ்களை வழங்கிட வேண்டிய DEO / CEO அலுவலகத்தில் 50,000 தாள்களை அடங்கிய கோப்புகள் குவியப்போகின்றன. அதாவது 100 A4sheet Bundle. அதாவது 3 ஆள் உயரத்திற்கு சுமார் 18 அடி உயரத்திற்கு ஒவ்வொரு DEO / CEO அலுவலகத்திலும் குவியப்போகின்றன. அக்குவியலை பக்கம்பக்கமா ஆய்ந்து ஒரு மாதத்திற்குள் சான்றிதழ் வழங்குவது சாத்தியாமா என்றால். . . . . வாய்ப்பில்லை தான்.
அலுவலர்களின் பணிச்சுமையையோ இவற்றை நகலெடுக்க ஆசிரியர்களால் செலவழிக்கப்பட உள்ள ஒட்டுமொத்தத் தொகையையோ, அலைச்சல்களையோ ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டாலும், இதற்காகும்தாள்களைத் தயாரிக்க வேண்டி அழிக்கப்படக்கூடிய இயற்கை வளங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது வேறு எவரையும் விட சுற்றுச்சூழல் கல்வியை உலகிற்குப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பொறுப்பாக உள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் TET உள்ளிட்ட தேர்வுகளின் விண்ணப்பங்கள் Onlineல் பெறப்பட்டு வருகிறது. மற்ற துறைகள் மாறிவிட்டன. அவர்களுக்குக் கற்பித்த - கற்பிக்கும் நாம் மாறுவது எப்போது என்றுதான் தெரியவில்லை.
Service Certificateஐ பொறுத்தவரை 3 தாள்களில் முடிய வேண்டிய நடைமுறைதான். ஆசிரியர்கள் கோருவதை BEO/HM பணிப்பதிவேட்டில் சரிபார்த்து கையொப்பமிட்டு DEO/CEOவிற்கு அனுப்பினால் போதுமானது. கல்வித்துறை அல்லாத மற்ற துறைகளில் பலகாலமாக இதுதான் நடைமுறையே.
கல்வித்துறையில் மாறுதல் கலந்தாய்வுகளே ஆசிரியர்களின் அனைத்துவித தகவல்களும் அடங்கிய EMIS வழிதான் நடைபெறுகிறது எனும் போது, அதன் மூலமே Service Certificate விண்ணப்பித்து Online Approval வழியே ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வருவது கல்வித்துறைக்கும் இலகுவான பணிதான்.
இதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று, Individual EMIS Loginல் TRBயின் TETற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையைக் கொண்டுவரும் வல்லமையும் சார்ந்த இரு துறைகளுக்குமே இருக்கிறது.
இவற்றையெல்லாம் அவர்களுக்கு விரைந்து நினைவூட்ட / வலியுறுத்த வேண்டிய நிலையில் சங்கங்கள் உள்ளன. ஆசிரியர்களோ அலுவலர்களோ யாராயினும் அவர்தம் பணிச் சூழலை எளிமையாக்கித் தருவதுதானே அனைத்துத்துறை சார் சங்கங்களின் பொறுப்பு. பொறுப்பை விரைந்து உணர்ந்து செயல்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆசிரியர்களின் பலதரப்பட்ட கல்வித் தகுதிகளால் TETற்கு விண்ணப்பிப்பதில் எழுந்த குழப்பத்தைத் தற்போது டிட்டோஜாக் தீர்த்து வைத்துள்ளது. அதனோடே கூடுதலாக,
1. தேவையற்ற Xerox குவிப்பு நடைமுறையைத் தவிர்த்து SR அடிப்படையில் Service Certificate வழங்கிடல்
2. EMIS Online Approval வழி Service Certificate வழங்கிடல்
3. EMIS மூலம் TETற்கு விண்ணப்பித்தல்
என்ற மூன்றில் ஒன்றையாகிலும் நடைமுறைக்குக் கொண்டுவர களத்தில் விரைந்து இறங்க வேண்டும்.
கூடுதலாக, TET முடித்தால் தான் பணியில் தொடர முடியும் என்பதே கல்வித்துறையின் தற்போதைய நடைமுறை என்பதால், அந்நடைமுறைக்கு இணங்கும் ஆசிரியர்களிடம் சமூக வலைதளங்களில்,
* ~முன் அனுமதி வாங்கு~
* ~தடையின்மைச் சான்று NOC வாங்கு~
என்று 'பாஸ் பெருசா பெயிலு பெருசா' காமடி போல உருட்டிக் கொண்டிருப்போரிடம், *அட வண்டுருட்டான் தலையன்களா, நாமா நம்ம விருப்பத்துல எழுதப்போனாத்தான் Pre permission, NOC எல்லாம் தேவ; அவுகளே நீ எழுதுனாத்தேன் வேலைல வைப்போம்னு சொல்றதுக்கெல்லாம் தேவையில்ல!'* என்று முற்றுப்புள்ளி வைப்பதும் காலத்தின் தேவை. ஏனெனில், ஆசிரியர்களின் தேவையற்ற அவதிகளுக்கு அடித்தளமிடுவதே இதுபோன்ற சமூக வலைத்தள வாந்திகளே!
TETற்கு விண்ணப்பிக்க 2 மாதங்கள் காலமிருப்பினும், இலட்சக்கணக்கில் ஆசிரியர்கள் தேர்வெழுத உள்ளதால் காலம், பொதுத் தேர்தல், பொதுத்தேர்வுப் பணி & TRB Server உள்ளிட்டவற்றின் நிலையையும் அறிந்து சங்கங்கள் விரைந்து செயல்பட சார்ந்த ஆசிரியர்கள் அனைவருமே தங்களது மட்டத்தில் தொடர் அழுத்தங்களைக் கொடுத்தாக வேண்டும். இப்ப அழுத்தம் தரலேனா பின்னாடி வழக்கம்போல அவதிதான்படனும். ஐந்தாண்டுத் தவறை இனியும் தொடராதிருந்தால் தொல்லைகள் குறையும்!

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி