மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வு 2025-ன் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் பட்டதாரி அனுஜ் அக்னிஹோத்ரி, 52.88 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான யுபிஎஸ்சி முடிவுகளில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார் டாக்டர் அக்னிஹோத்ரி(26). இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். அக்னிஹோத்ரி தனது முதன்மை எழுத்துத் தேர்வில் 867 மதிப்பெண்களையும், ஆளுமைத் தேர்வில் 204 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இதன் மொத்த மதிப்பெண் 1,071 ஆகும்.
இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டின் ராஜேஸ்வரி (28) பிடித்துள்ளார். இவரது மதிப்பெண்கள் 52.69 சதவீதம் ஆகும். சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் மின் மற்றும் மின்னனு பொறியியல் பட்டம் பெற்றவரது மொத்த மதிப்பெண்கள் 1,067. இவர் தனது எழுத்து தேர்வில் 865, நேர்காணலில் 202 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். தனது ஐந்தாவது முயற்சியில் சமூகவியலை விருப்பப் பாடமாகக் கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் ராஜேஸ்வரி.
இந்த வருடம் யுபிஎஸ்சியின் வெற்றியாளர்களாக மொத்தம் 958 பேர் உள்ளனர். இவர்களில் 659 ஆண்களும், 299 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு, மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இது, முதற்கட்டம் (பிரிலிம்ஸ்), பிரதானம் (மெயின்ஸ்) மற்றும் ஆளுமைத் தேர்வு அல்லது நேர்காணல் (இண்டர்வியு) என மூன்று நிலைகளில் உள்ளது.
மூன்றாம் இடத்தைப் பிடித்த அகன்ஷ் துல் 52.19 சதவீதம் மதிப்பெண் பெற்றார். மொத்தம் 1,057 மதிப்பெண்களுடன் அவர்- எழுத்துத் தேர்வில் 864, நேர்காணலில் 193 பெற்றுள்ளார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்த ராகவ் ஜுன்ஜுன்வாலா மற்றும் இஷான் பட்நாகர் முறையே 51.45 சதவீதம் மற்றும் 51.25 சதவீதம் பெற்றுள்ளனர். இவர்களில் ஜுஞுன்வாலா பெற்ற1,042 மொத்த மதிப்பெண்களில் பிரதானத் தேர்வில் 847 மற்றும் நேர்காணலில் 195 பெற்றுள்ளார். இவர்களில் ஜுன்ஜுன்வாலா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை கலை பட்டம் பெற்றவர். ஐந்தாம் இடத்தின் பட்நாகர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஏ எல்எல்பி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர்.
பட்நாகர், 1,038 மொத்த மதிப்பெண்களில் பிரதானத் தேர்வில் 823 மற்றும் நேர்காணலில் 215 பெற்றார். 2025 ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் முதற்கட்டத் தேர்வு கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 9,37,876 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 5,76,793 பேர் தேர்வு எழுதினர். இதில், 14,161 பேர் தகுதி பெற்று அடுத்தகட்ட முதன்மை தேர்வை கடந்த ஆகஸ்ட், 2025 இல் எழுதினர்.
இவர்களில் 2,736 பேர் இறுதிகட்ட ஆளுமைத் தேர்வு அல்லது நேர்காணலுக்கு தகுதி பெற்றனர். இதன் முடிவில் 958 பேர் யுபிஎஸ்சியின் வெற்றியாளர்களாகத் தேர்வாகி உள்ளனர்.இவர்கள் தம் மதிப்பெண்களுக்கு ஏற்றவகையில், ஐஎப்எஸ். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர் எஸ் உள்ளிட்ட சுமார் 24 வகை பணியில் அமர்த்தப்படுவார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு மட்டும் குறிப்பிட்ட மாநிலங்களின் பேட்ச்சாக பணி அமர்த்தப்படுவார்கள். மற்ற பணியைப் பெற்றவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்ற வேண்டி இருக்கும். ஐஎப்எஸ் எனும் இந்திய வெளிநாட்டு பணிக்கு தேர்வானவர்கள் வெளிநாடுகளிலும் பணியாற்ற வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி